

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கட்டப்பட்ட 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தானியக் களஞ்சியங்கள் தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
108 வைணவ திவ்ய தேசங் களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். 21 கோபுரங்கள், 29 கருவறை விமானங்கள், 40 உப சந்நதிகளுடன் மிகப் பெரிய கோயிலாக விளங்கிவரும் இந்தக் கோயிலில் 2001-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இதன் ஒருபகுதியாக இந்தக் கோயிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கொட்டாரம் பகுதியில் ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கற்களால் கட்டப்பட்ட மிகப் பிரம்மாண்டமான 5 தானியக் களஞ்சியங்களும் திருப்பணி காணுகின்றன.
இந்த தானியக் களஞ்சியங்கள் ஒவ்வொன்றும் தலா 32 அடி உயரம், 20 அடி விட்டம் கொண்டவையாகவும், முதல் மற்றும் 5-வது களஞ்சியங்கள் வட்ட வடிவிலும், 2, 3 மற்றும் 4-வது களஞ்சியங்கள் எண்கோண வடிவிலும் காணப்படுகின்றன.
அந்த காலத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் விளைவிக்கப்படும் தானியங்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தானியங்களைச் சேமித்து வைப்பதற்காக இவைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில் மற்றும் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பராய்த்துறை ஆகிய இடங்களில் இதுபோன்ற பெரிய அளவிலான தானியக் களஞ்சியங்கள் உள்ளன.
இந்த தானியக் களஞ்சியத்தில் மேலிருந்து தானியங்களைக் கொட்டுவதற்காக சிறிய துவாரங் களும், அதை தேவைப்படும்போது எடுப்பதற்காக கீழே ஒரு வழியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த களஞ்சியங்கள் ஒவ்வொன் றும் தலா 1.20 டன் அளவுக்கு தானியங்களை சேகரித்து வைக் கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை முழுவதுமாக அச்சுக் கல் என்று சொல்லப்படும் உயரம் குறைந்த செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இவை கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிதிலமடைந்தன.
ரூ.52 லட்சம் ஒதுக்கீடு
பக்தர்கள் மற்றும் தொல்லிய லாளர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பாரம்பரிய தானியக் களஞ்சியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மூத்த தொல்லியல் அறிஞர் கே.டி.நரசிம்மன் ஆலோ சனையின்பேரில் ரூ.52 லட்சம் செலவில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கென பிரத்யேகமாக செங்கல் மற்றும் பொள் ளாச்சியில் இருந்து தருவிக் கப்பட்ட சுண்ணாம்பு பயன்படுத் தப்படுகிறது. சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் ஆகியவற்றை கலந்து 10 நாள் ஊற வைத்து, நன்கு புளித்ததும் அதனை அரைத்து அந்த கலவையைக் கொண்டு செங்கற்கள் ஒட்டவைக்கப்பட்டு, புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றை மீண்டும் தானியங் களை சேமிக்கப் பயன்படுத்தப் போவதில்லை என்றாலும் பழமை யைப் பாதுகாக்கும் நோக்கத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.