

நிலக்கரி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த வல்லூர் அனல் மின்நிலையத்தின் 3 அலகுகளிலும் தற்போது மின் உற்பத்தி நடந்து வருகிறது.
தமிழக மின் உற்பத்தியில் 60 சதவீத பங்களிப்பை அளிப்பது அனல் மின் நிலையங்கள்தான். சமீப காலமாக அனல் மின் நிலையங்களில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
சீரமைக்கப்பட்டது
நேற்று அதிகாலையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நேற்று மாலையே அது சீரமைக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மத்திய - மாநில கூட்டு முயற்சியில் வல்லூரில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளிலும் 1,078 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஒரு அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
மற்ற இரு அலகுகளிலும் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மீண்டும் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஒரு அலகும் மீண்டும் இயங்க தொடங்கிவிட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
11,454 மெகாவாட்
நேற்று காலை நிலவரப்படி 11,454 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மின் தேவையும் அதே அளவில் இருந்ததால் மின் தடை ஏதும் செய்யப்படவில்லை என மின் தொடரமைப்புக் கழகம் தெரிவித்துள்ளது.