

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 100 சதவீதம் ஆதார் விவரங்கள் பெறப்பட்டு, அவற்றில் 90 சதவீதம் விவரங்களை பதிவு செய்யும் பணிகளை தமிழக தேர்தல் துறை முடித்துள்ளது.
இரட்டை பதிவுகள், போலி வாக்காளர்கள் உள்ளிட்ட தவறுகள் மற்றும் பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் வகையில் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்திட்டப்படி வாக்காளர்கள் ஆதார் எண், தொலைபேசி மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் இப்பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா திட்டமிட்டார். இதன்படி தமிழகத்தில் உள்ள 64,099 வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதற்கான பணிகள் வழங்கப்பட்டன.
வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் விவரங்கள் அடங்கிய பட்டியலுடன் வீடு வீடாகச் சென்று முதலில் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தினர்.
அதன் பின், அவர்களின் ஆதார் எண், தொலைபேசி அல்லது கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி இருந்தால் அதையும் பதிவு செய்தனர். இவற்றுடன் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் உள்ளிட்டவை இருப்பின் அதற்கான படிவங்களையும், ஆவணங்களையும் பெற்றுக்கொண்டனர். அதன் பின், ஆதார் விவரங்களை கணினியில் பதிவு செய்து, தொடர்ந்து ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியலை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
வாக்குச்சாவடி அலுவலர் வீட்டுக்கு வரும்போது வீட்டில் இல்லாதவர்கள், விடுபட்டவர்கள் வசதிக்காக 4 சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி ஏப்ரல் 12, 24 தேதிகள், மே மாதம் 10, 24 தேதிகளில் முகாம்கள் அறிவிக்கப்பட்டு, அதில் 3 முகாம்கள் முடிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட முகாம் வரும் 24-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களிடம் ஆதார் விவரங்களைப் பெறும் பணி 26 மாவட்டங்களில் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
ஆதார் - வாக்காளர் பட்டியல் இணைப்புப் பணியில், விவரம் சேகரிப்பு, பதிவு, இணைப்பு என 3 விதமான பணிகள் நடக்கின்றன. தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் தற்போது வரை 5.45 கோடி வாக்காளர்களின் ஆதார், தொலைபேசி, இ-மெயில் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களில் 26-ல் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் 100 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள 10 மாவட்டங்களில்தான், 17 லட்சம் வாக்காளர்களின் விவரம் சேகரிக்கப்பட வேண்டும். இப்பணிகள் சில தினங்களில் முடிந்துவிடும்.
பெறப்பட்ட 5.45 கோடி பேரின் விவரங்களில், 4.50 கோடிக்கும் மேற்பட்ட அதாவது 90 சதவீதத்துக்கும் அதிகமான விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக ஆதார்- வாக்காளர் பட்டியல் இணைப்பு பணி ஏற்கேனவே கோவை, தருமபுரி, திருவள்ளூரில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் நாளை (இன்று) இணைப்புப் பணிகள் தொடங்கிவிடும். அடுத்த 15 தினங்களுக்குள் ஆதார் வாக்காளர் பட்டியல் இணைப்பு பணி முழுவதுமாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.