

வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே அடுத்தடுத்து வந்த 2 ரயில்களில் பெண்களிடம் 7 பவுன் நகை கொள்ளையடிக் கப்பட்டது. தொடரும் இதுபோன்ற சம்பவத்தால் ரயில் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார் பேட்டை அடுத்த சோமநாயக்கன் பட்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. சிக்னல் காரண மாக ரயில் மிதமான வேகத்தில் வந்தது. இந்த ரயிலில் பெங்களூரு காந்தி பஜார் பகுதியைச் சேர்ந்த உத்தமஜெயின் மனைவி சாவித்ரி (50) என்பவர் பயணம் செய்தார்.
அப்போது ஒருவர் மெதுவாக சென்ற ரயிலில் ஏறி, சாவித்ரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தார். திடுக்கிட்டு எழுந்த சாவித்ரி கூச் சலிட்டார். அதற்குள் அந்த நபர் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார்.
அதேபோல், அடுத்த சில நிமிடங்களில் எதிர்புறமாக சென் னையில் இருந்து மைசூர் வரை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் கேதாண்டப்பட்டி அருகே சிக்னல் காரணமாக மிதமான வேகத்தில் வந்தது. இந்த ரயிலில் பயணித்த சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கல்யாணகுமார் மனைவி உஷா (45) என்பவரின் கழுத்தில் இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியோடினர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸில் சாவித்ரி, உஷா ஆகியோர் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோலார்பேட்டை அருகே சிக்னல் காரணமாக மெது வாகச் செல்லும் ரயில்களில் ஏறும் மர்ம கும்பல், அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.