

கீழ்க்கட்டளை அருகே பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வேன் டிரைவரை தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் மீதே வேன் டிரைவர் மோதிவிட்டு சென்றார். தப்பிய டிரைவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (49). சென்னை மவுண்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 9-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் காவல்துறை நடத்திய யோகா வகுப்பை முடித்துவிட்டு வெங்கடேசன் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கீழ்கட்டளை அருகே மேடவாக்கம் சாலையில் காலை 6.25 மணி அளவில் மினி லோடு வேன் ஒன்று சாலையில் சென்ற ஒரு பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனைப் பார்த்த வெங்கடேசன் வேனை பிடிப்பதற்காக பைக்கில் வேகமாக முந்திக் கொண்டு சென்றார். கோவிலம்பாக்கம் சிக்னல் அருகே பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்த போக்குவரத்து போலீஸாரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அதன்பின் தடுப்பை எடுத்து சாலையில் போட்டு வேனை நிறுத்தினார்.
பைக் மீது மோதிவிட்டு எப்படி நிற்காமல் செல்லலாம் என்று வெங்கடேசன், வேன் டிரைவரிடம் கேட்டுள்ளார். இதனை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாத டிரைவர், தடுப்புடன் வெங்கடேசனை மோதியபடி வேனை வேகமாக எடுத்துக் கொண்டு சென்றார். இதில் கீழே விழுந்த வெங்கடேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த பொதுமக்கள் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், வெங்கடேசனின் இடுப்பு பகுதியில் 5 எலும்புகள் உடைந்து இருப்பதும் மற்றும் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கூறுகையில், “நடந்த சம்பவங்கள் அனைத்தும் சாலையில் உள்ள போலீஸ் பூத் மற்றும் அங்கிருந்த ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. பதிவான காட்சிகள் அனைத்தும் போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வேன் டிரைவரை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறை யாரும் செய்ய மாட்டார்கள்” என்றார்.
வெங்கடேசன் மீது மோதிவிட்டு சென்ற வேன் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.