

ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் நமக்கு தேவையான ரயில், தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியும் அப்ளிகேஷனை விழுப்புரம் அருகேயுள்ள மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் துறையில் பொறியியல் (Electronics and Communication Engineering) இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் அருண் பிரசாத், தங்கராஜ், பாலமுருகன், சதீஷ் ஆகியோர் இணைந்து ‘ரயில் லொகேஷன் டிடெக்டர்’ அப்ளிகேஷனை வடிவமைத்து இருக்கின்றனர்.
இதுகுறித்து அந்த மாணவர்கள் கூறியதாவது: ரயில்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருக்கின்றன. எப்போது குறிப்பிட்ட இடத்துக்கு ரயில் வந்து சேரும் போன்ற தகவல்கள், ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு கொடுத்தால் மட்டுமே பயணிகளால் அறிய முடியும். ஆனால், ரயில் வரும் நேரத்தை பயணிகளே தெரிந்து கொள்ள உதவும் வகையில், ‘ரயில் லொகேஷன் டிடெக்டர்’ என்ற அப்ளிகேஷனை நாங்கள் இணைந்து வடிவமைத்துள்ளோம்.
எலெக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய வரவான ‘ராஸ்பெர்ரி-பை’ எனும் நவீன கருவி, ஜிபிஎஸ், ஜிஎஸ்எம், ஜிபிஆர்எஸ் கருவி, பேட்டரி ஆகியவற்றைக் கொண்டு இதை வடிவமைத்திருகிறோம். ‘ராஸ்பெர்ரி-பை’ என்பது சிறிய அளவிலான சிபியு போன்றது.
இந்தக் கருவி, ஒரு தொலைபேசியின் நீள- அகலம் கொண்டது. எடை 150 கிராம். இந்தக் கருவியை ரயிலில் ஏதேனும் ஒரு பகுதியில் அமைத்துவிட்டால், அந்தக் கருவியில் இருந்து நமது ஆண்ட்ராய்டு போன் மூலமாக ரயில் எங்கே இருகிறது என அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள ஜிபிஎஸ் கருவியானது, செயற் கைக்கோள் உதவியுடன் ரயில் சென்று கொண்டிருக்கும் இடத்தை ஜிஎஸ்எம் மற்றும் ஜிபிஆர்எஸ் வழியாக ‘ராஸ்பெர்ரி-பை’க்கு அனுப்பிவிடும். ‘ராஸ்பெர்ரி-பை’ கருவி இந்தத் தகவலை எங்களது சர்வருக்கு அனுப்பிவைத்துவிடும்.
இதில் இருந்து ரயில் எங்கே இருக்கிறது, எத்தனை மணிக்கு ரயில் நிலையத்தை வந்தடையும் போன்ற தகவல்களை ஆண்ட்ராய்டு ஆப்-களுக்கு கூகுள் மேப்ஸ் மூலம் துல்லியமாகத் தெரிவித்துவிடும். ரயில் தாமதம் மற்றும் எங்கேனும் நின்றுவிட்டால் அதையும் நாம் கண்டுபிடித்து விடலாம் என்றனர் அவர்கள்.
இதுதொடர்பாக துணைப் பேராசிரியர் ராஜபார்த்திபன் கூறும்போது, “ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டாலோ, புயல் மழை, மலைச் சரிவு, பனிச் சரிவு போன்ற இயற்கை பேரிடர்களின்போது ஓடிச் சென்று உதவவும் இந்தக் கருவி நிச்சயம் பயன்படும்.
இந்த கருவிக்கான காப்புரிமையைப் பெற மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.
கல்லூரி முதல்வர் செந்தில் கூறும்போது, “இந்தக் கருவியை கார் மற்றும் கப்பலில்கூட பயன்படுத்த முடியும். இந்தக் கண்டுபிடிப்பை கல்லூரியின் சார்பாக CPRI, BANGALORE-க்கு சோதனைக்காக அனுப்ப உள்ளோம்” என்றார்.