

சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த இளைஞரின் கால் கருப்பாக மாறியதால், அவர் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.
பெங்களூரில் இருந்து கடந்த மே 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் இளம்பெண் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயமடைந்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 9 பேர் பூரணமாக குணமடைந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். மீதமுள்ள 5 பேர் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணா (27) என்பவர் மீண்டும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சேர்க்கப் பட்டுள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், ‘‘குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த கிருஷ்ணாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது
திடீரென கால் கருப்பாக மாறிவிட்டதாகக் கூறி இங்கு அட்மிட் ஆகியுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்றனர்.