

மவுலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு கோப்பைக்கான 50-வது அகில இந்திய கால்பந்து போட்டிகள் காயல்பட்டினத்தில் நாளை (மே 6) தொடங்குகின்றன.
காயல்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் ஆண்டு தோறும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 50-வது பொன்விழா போட்டி நாளை தொடங்குகிறது. காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் முன்னாள் அரசுத் துறை முதன்மை செயலாளர் ஸ்வரன் சிங் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு கால்பந்து கழக தலைவர் ஜேசையா வில்லவராயர் தலைமை வகிக்கிறார். போட்டிகள் வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகின்றன. 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ. பல்லாக்கு லெப்பை, செயலாளர் பி.எஸ்.எம். இலியாஸ், துணை செயலாளர் எஸ்.எம். ரபீக், பொருளாளர்கள் எம்.எல். ஹாருன் ரசீத், ஏ.எச். செய்யது உமர், விளையாட்டு குழுத் தலைவர் எஸ்.எம். உசைர், செயலாளர் பி.எஸ். அப்துல் காதர் செய்து வருகின்றனர்.