

சென்னை, ஜவுளிக் கடை அதிபரின் மகனை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஜவுளிக் கடை அதிபர். இவரது மகன் கீர்த்திவாசன் (14). திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்த பாபு, விஜய் ஆகிய இருவரும், 2010, நவம்பரில் கீர்த்திவாசனைக் கடத்திச் சென்று ரூ. 3 கோடி கேட்டு மிரட்டி, முதற் கட்டமாக ரூ. 1 கோடியை பெற்றுக் கொண்டார்.அடுத்த கட்டமாக பணம் பெற முயன்றபோது, அண்ணா நகர் போலீஸார் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்து, கீர்த்திவாசனை மீட்டனர்.
செங்கல்பட்டில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜமாணிக்கம், குற்றம் சாட்டப்பட்ட பாபு, விஜய் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.