Published : 05 May 2015 05:20 PM
Last Updated : 05 May 2015 05:20 PM

புதரில் மறையும் புதிய மருத்துவமனை வளாகம்: சிரமத்தில் நல்லட்டிபாளைய கிராமப்புற மக்கள்

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனை வளாகம் புதர் மண்டி சேதமடைந்து வருகிறது.

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லட்டிபாளையத்தில் 50 வருடங்கள் பழமையான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு போதிய வசதிகள் இல்லாததால், புதிய மருத்துவமனை வளாகம் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ரூ.74 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு, மருத்துவமனை கட்டப்பட்டது. கூடுதல் படுக்கை வசதிகளுடன் சிகிச்சைப் பிரிவுகளும், அறுவைச்சிகிச்சை அரங்கு மற்றும் நவீன வசதிகளும் கொண்டு வரப்பட்டன. ஆனால், இந்த மருத்துவ வளாகம் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் திறப்பு விழா காணப்படவில்லை.

சிதிலமடைந்த பழைய கட்டிடத்திலேயே இன்று வரை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

பணிகள் முடிந்தும் புதிய வளாகம் பூட்டிக் கிடப்பதால், சுற்றிலும் புதர்கள் முளைத்து வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் மருத்துவமனை கட்டிடம் சீக்கிரமே சிதிலமடைந்துவிடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லட்டிபாளையம், கோவில் பாளையம், தேவனாம்பாளையம், தாமரைக்குளம், கோப்பனூர் புதூர், செங்குட்டைபாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். புதிய மருத்துவமனை வளாகம் பயன்பாட்டுக்கு வந்தால், பொள்ளாச்சிக்கும், கோவைக்கும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவோரின் எண்ணிக்கை குறையும். கிராமப்புற பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம் எளிதில் கிடைக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x