

ரூ.1 கோடி இழப்பீடு, கல்விக்கான செலவு மற்றும் அரசு வேலை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத் தினர் வலியுறுத்தினர்.
செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர மாநில போலீஸார், ஏப்ரல் 7-ம் தேதி சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துகிறது. முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சுமேத திவேதி தலைமையில் 4 பேர் குழுவினர், தமிழகத்தில் 3-வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 12 பேரின் குடும்பத்தினரிடம் திருவண்ணாமலை சுற்றுலா மாளிகையில் கடந்த 12-ம் தேதி விசாரணை நடத்தினர். அதன் பிறகு, தருமபுரியில் 7 பேரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். திருவண்ணாமலையில் விசாரணை நடத்தியபோது, ‘கொல்லப்பட்டவர்களின் இருப் பிடங்களுக்கு நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை அருகே வேட்டகிரிபாளைம், முருகாபாடி, காந்தி நகர் மற்றும் காலசமுத்திரம் கிராமங்களுக்கு சென்று 7 பேரின் குடும்பத்தினரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழு விசாரணை நடத்தியபோது, உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு குடும்பத்திடமும் தனித் தனியே விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், ஆந்திர போலீஸார் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்ததாக கூறப்படும் காந்தி நகர் கிராமத்தில் வசிக்கும் சேகர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கூறும்போது, “உரிய விசாரணை நடத்தி ஆந்திர போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் குடும்பத்துக்கு ஆந்திர அரசு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலை வழங்கவும், பிள்ளைகளின் கல்விச் செலவை ஆந்திர அரசே ஏற்க பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்’’ என்றனர்.