

தமிழ்நாடு குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் அரசுப் பணம் ரூ.95 கோடி சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் மாயமாகி யுள்ளன. அவற்றை தேடிக் கண்டு பிடிக்க காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தமிழக அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள எழிலகம் வளாகம் உள்ளது. இங்கு தமிழ்நாடு குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. 2011-ம் ஆண்டில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அதை சரிசெய்ய இந்த வாரியத் துக்கு அரசு ரூ.95 கோடி ஒதுக்கியது.
அந்த தொகையை செலவு செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் திடீரென காணாமல் போய்விட்டன. பல கோடி ரூபாய் அரசுப் பணம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்பதால் அவற்றைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவணங்களை தேடிக் கண்டுபிடிக்க போலீஸாரின் உதவியையும் நாடியுள்ளனர். இதற்காக, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரி முத்துக்குமாரசாமி புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.