

மது மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிராக அரியலூரில் தொடங்கி கடலூர் வரை ஒரு மாத பிரச்சார இயக்கத்தை காந்தியவாதி சசிபெருமாள் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அவர் வந்தார். திடீரென வண்டிகேட் பகுதியில் உள்ள 100 மீட்டர் உயரம் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார். 80 மீட்டர் உயரத்தில் அமர்ந்து கொண்டு, ‘ஐந்தாவது முறையாக முதல் வராக பொறுப்பு ஏற்றுள்ள ஜெயலலிதா, முதல் கையெழுத் திட்டு மதுக்கடைகளை மூட வேண்டும்’ என்று கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
அது பற்றிய துண்டு பிரசுரங்களை அவருடன் வந்த பிரச்சார குழுவினர் விநியோகம் செய்தனர். இது குறித்த தகவலறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ஜெயலட்சுமி, வட்டாட்சியர் சீனுவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் மற்றும் போலீஸார், சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். சசிபெரு மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.
பின்னர், அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில், கீழே இறங்கி வர சம்மதம் தெரிவித்தார். உடனே, தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மேலே சென்று அவரை பாதுகாப்பாக கயிறை கட்டி இறக்கி அழைத்து வந்தனர்.
பின்னர், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அவரை போலீஸார் அழைத்து சென்றனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
நேற்று காலை 10 மணிக்கு செல்போன் கோபுரம் மீது ஏறிய சசிபெருமாள், 5 மணி நேரம் கழித்து பிற்பகல் 3 மணி அளவில் கீழே இறங்கினார். அவரது போராட்டத்தால் சிதம்பரத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.