

ஆழ்ந்த கவனத்தால் நிஜமான கனவு: முதலிடம் பிடித்த திருப்பூர் மாணவி மகிழ்ச்சி
ஆழ்ந்த கவனத்துடன் படித்ததால் கனவு நிஜமாகியுள்ளது என்று பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாணவி ஜெ.பவித்ரா கூறினார்.
பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த, திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.பவித்ரா, 1192 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
அவர் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ் - 196, ஆங்கிலம் - 197, பொருளியல் - 199, வணிகவியல் - 200, வணிகக் கணிதம் - 200, கணக்குப் பதிவியல் 200.
இது தொடர்பாக அவர் நேற்று `தி இந்து’ வுக்கு அளித்த பேட்டி: எனது பள்ளி வாழ்க்கை முழுவதும் இந்தப் பள்ளியில்தான். பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் சக மாணவிகள் அளித்த ஊக்கம்தான், மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்க வைத்துள்ளது. எனது தந்தை ஜானகிராமன், பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். தாய் ராதா, அக்கா நிகிதா, தங்கை ப்ரீத்தி. பள்ளித் தேர்வுகளில் முழு அக்கறை செலுத்தினேன். அதேபோல், பள்ளி நிர்வாகமும் சிறப்புப் பயிற்சிகள் அளித்ததால் சாதிக்க முடிந்தது.
ஆடிட்டராக வேண்டும் என்ற ஆசையோடு, வணிக பாடப் பிரிவை படித்தேன். வரும் ஜூன் 15-ம் தேதி சி.ஏ. நுழைவுத் தேர்வு எழுத உள்ளேன்.
தொடர்ச்சியாக முதல் மதிப்பெண் எடுத்ததால், பல்வேறு ஊக்கப் பரிசு, கேடயங்களை பள்ளி நிர்வாகம் வழங்கியது. இது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. ஆழ்ந்த கவனத்தோடு படித்ததால் கனவு நிஜமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆடிட்டர் ஆவதே எனது விருப்பம்: முதல் மாணவி நிவேதா பெருமிதம்
கோவையைச் சேர்ந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பி.காம். முடித்த பின்னர் ஆடிட்டர் ஆக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோவை செல்வபுரம் பிருந்தாவன் லே-அவுட்டைச் சேர்ந்தவர் எஸ்.பி.லஷ்மிநாராயணன். தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். மனைவி அருணாதேவி. இவர்களது மகள் எல்.பி.நிவேதா, செல்வபுரத்தில் உள்ள ஸ்ரீ செளடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வு எழுதிய அவர் 1192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் - 199, ஆங்கிலம் - 194, பொருளாதாரம் - 199, வணிகவியல் - 200, கணக்குப்பதிவியல் - 200, வணிகக் கணிதம் 200.
தமிழ் பாடத்திலும் இவர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பி.காம். முடித்துவிட்டு ஆடிட்டர் ஆவதே லட்சியம் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியது: 10-ம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தேன். பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என நினைத்துப் படித்தேன். ஒவ்வொரு பாடத்தையும் புரிந்து படிப்பேன். நன்றாகப் படிப்பேன் என்பதால் ஆசிரியர்களும் எனக்கு நேரம் ஒதுக்கி சொல்லிக் கொடுத்தார்கள்.
நல்ல மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் எவ்வித அழுத்தமும் கொடுத்ததில்லை என்றார்.
நிவேதாவை பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் வரவேற்று இனிப்பு ஊட்டி பாராட்டினர். பின்னர், ஆட்சியர் அலுவலகம் சென்ற நிவேதாவுக்கு, ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
மருத்துவ சேவை செய்ய வேண்டும்: 2-ம் இடம் பிடித்த சரண்ராம் விருப்பம்
மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என குமாரபாளையம் எஸ்எஸ்எம் லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் எம்.சரண்ராம் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்எஸ்எம் லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் எம்.சரண்ராம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1190 மதிப் பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ் - 197, ஆங்கிலம் - 193, கணிதம் - 200, இயற்பியல் - 200, வேதியியல் - 200, உயிரியல் - 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவர் சரண்ராம் கூறுகையில், ‘தந்தை முருகானந்தம் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தாயார் சசிகலா. மாநில அளவில் முதல் இடம் பிடிப்பேன் என எதிர்பார்த்தேன். எனினும், இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது குறிக்கோள்’ என்றார்.
நியூராலஜி படிப்பதே குறிக்கோள்: மாணவர் பிரவீண் ஆர்வம்
மருத்துவப் பிரிவில் நியூராலஜி படிக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவர் ஆர்.பிரவீண் கூறினார்.
பரமத்தி வேலூர் அருகே நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.பிரவீண், பாடவாரி யாக, தமிழ் - 196, ஆங்கிலம் - 194, கணிதம் - 200, இயற்பியல் - 200, வேதியியல் - 200, உயிரியல் - 200 என மொத்தம் 1190 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
திட்டமிட்டேன்; இலக்கை எட்டினேன்: திருச்சி வித்யவர்ஷினி பெருமிதம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இ.வித்யவர்ஷினி 1,190 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் தொழுதூரில் வசிக்கும் இவர், திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சவுடாம்பிகா மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் பயின்று வந்தார். இவரது தந்தை யேசுகிருஷ்ணன் வி.களத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணிபுரிகிறார்.
மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்தது குறித்து மாணவி வித்யவர்ஷினி கூறியபோது, “சென்னை எம்.எம்.சி-யில் மருத்துவம் பயின்று நரம்பியல் நிபுணராக வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார்.
ஆட்சியராகி மக்களுக்கு சேவை செய்வேன்: அந்தியூர் மாணவர் விக்னேஷ்வரன் உறுதி
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் விக்னேஷ்வரன் 1,190 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தில் தேர்ச்சி பெற்றார்.
இவரது தந்தை இளங்கோவன் பவானியில் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். தாய் சண்முக பிரியா.
விக்னேஷ்வரன் கூறும்போது, “மாநில அளவில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஆட்சியராகி மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வமாக உள்ளேன். பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தி ஊக்கம் அளித்ததால், அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது” என்றார்.
வேளாண் பாடத்தில் மாநில முதலிடம்
அந்தியூர் மங்களம் மெட்ரிக் பள்ளி மாணவன் பாரதிதாசன் வேளாண் செயல்முறை பாடத்தில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். பாரதிதாசனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த அம்மாசத்திரம். இவரது தந்தை ராஜ்குமார். கால்நடை ஆய்வாளராக பணிபுரிகிறார்.