

மத்திய அரசு நிறைவேற்ற முயலும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து மே 14-ம் தேதி தமிழகத்தில் 400 இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிட முயலும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை இரண்டாவது முறையாக அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்ற பாஜக அரசு முயன்று வருகிறது.
இந்த சட்டத்தை எதிர்த்து மே 14-ம் தேதி சென்னையில் நடைபெறும் போராட்டத்தை கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைக்கிறார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வட சென்னை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் 400 இடங்களில் நடக்கும் போராட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.