Published : 22 May 2014 10:30 AM
Last Updated : 22 May 2014 10:30 AM

குற்றாலம் அருவியில் பாதுகாப்பு இல்லை: அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றாலம் அருவிக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரிய வழக்கில் தென்காசி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஜராக மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:

சீசனை முன்னிட்டு குற்றாலத்துக்கு ஏராளமான மக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். ஆனால் பழைய குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. அருவிகளுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. நடைபாதை உள்பட பொதுமக்கள் பயன்பாட்டுக்குரிய இடங்களிலும் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் நெரிசல் அதிகரித்து வருகிறது.

குற்றாலம் சாலையில் மது அருந்திய போதையில் வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டுகின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் போலீஸார் நிறுத்தப்படவில்லை. சட்டவிரோதமாக வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருவிகளில் குளிக்கும் இடங்களில் கம்பி தடுப்பு இல்லை.

இதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் வசதி செய்யப்படவில்லை. ஆடைகள் மாற்றுவதற்கு தனியிடம், கழிப்பறை எதுவும் கிடையாது. இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

எனவே, பழைய குற்றாலம் அருவிக்கு வரும் பொதுமக்கள், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்றார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தென்காசி பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர், தென்காசி பொதுப் பணித் துறை செயற் பொறியாளர், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x