Published : 20 May 2014 11:00 AM
Last Updated : 20 May 2014 11:00 AM

‘அசோக் – அஞ்சலி’ சிங்கவால் குரங்கு ஜோடிக்கு பிறந்த குட்டி- வண்டலூர் பூங்காவின் புதிய வரவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அஞ்சலி – அசோக் என்ற சிங்கவால் குரங்குகள் இணைந்து ஒரு குட்டியை ஈன்றுள்ளன. இதன்மூலம் வண்டலூர் பூங்காவில் சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அஞ்சலி (5) என்ற சிங்கவால் குரங்கு, அசோக் (7) என்ற ஆண் சிங்கவால் குரங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு குரங்குகளும் இணைந்து கடந்த 1-ம் தேதி சிங்கவால் குரங்குக் குட்டி ஒன்றை ஈன்றுள்ளன. இதன்மூலம் பூங்காவில் சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

பெயரில் ‘சிங்கம்’ ஏன்?

சிங்கத்தின் வால் போல இந்த வகை குரங்கின் வால் நுனியில் கொத்தாக முடி இருப்பதால், ‘சிங்கவால் குரங்கு’ என அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் சோலைக் காடுகளில் காணப்படுவதால் சோலை மந்தி என்றும் அழைக்கப்படுகிறது. சிங்கத்தின் பிடரியை ஒத்த முகம், வசீகரமான வால், கருமை நிறம் ஆகியவற்றால் பலரையும் சிங்கவால் குரங்குகள் கவர்ந்துவிடுகின்றன.

அழிந்துவரும் பரிதாபம்

இது அரிதான மற்றும் அழிந்து வரும் உயிரினமாகும். உலகிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் மட்டும் சிங்கவால் குரங்குகள் காணப்படுகின்றன. இந்த குரங்கின் வாழ்விடங்களான பசுமைமாறாக் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிடப்படுவதால் குரங்கு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அது மட்டுமின்றி, மரபியல் ரீதியாகவும் குரங்கு இனம் ஆபத்துக்குள்ளாகியுள்ளது.

சிங்கவால் குரங்கை அழிவில் இருந்து காக்கும் பொருட்டு அடைப்பிட இனப்பெருக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இனப்பெருக்க ஒருங்கிணைப்பு பூங்காவாக, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டது. மேலும் மைசூர், திருவனந்தபுரம் பூங்காக்கள் இனப்பெருக்க பங்கேற்பு பூங்காவாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

வண்டலூர் பூங்காவின் சாதனை

இத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக வண்டலூர் பூங்காவுக்கு வால்பாறை சோலைக் காடுகளில் இருந்து 1990-ல் ஒரு ஆண் குரங்கு, 3 பெண் குரங்குகள், 1999-ல் ஒரு பெண் குரங்கு கொண்டு வரப்பட்டன. 4 பெண் குரங்குகளும், அதன் வழித்தோன்றல்களும் இனப்பெருக்கம் செய்து இதுவரை 46 குட்டிகளை ஈன்றுள்ளன. அடைப்பிட இனப்பெருக்க முறையில், இந்த எண்ணிக்கை தேசிய அளவில் மிகப்பெரிய சாதனையாகும். இங்கு பிறந்த சிங்கவால் குரங்குகள், விலங்குகள் பரிமாற்ற முறையில் குவாஹாட்டி, சிம்லா, டெல்லி, திருவனந்தபுரம், மைசூர், ஹைதராபாத், பரோடா, கிண்டி உயிரியல் பூங்காக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிங்கவால் குரங்குகளை அழிவில் இருந்து காக்கும் பணியில் வண்டலூர் பூங்கா சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது.

இவ்வாறு பூங்கா இயக்குநர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x