

கன்னியாகுமரியில் சீஸன் நேரத்தில் காட்சி கோபுரம் திறக்காததால் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். காட்சி கோபுரத்தை பார்க்கும் ஆர்வம் மிகுதியில் பூட்டிய கேட்டின் மேல் சிறுவர்கள் ஏறிகு தித்து வருகின்றனர். இதனால் ஆபத்தான சூழலில் பல சுற்றுலா மையங்கள் மாறி வருகின்றன.
கோடைகால சீஸனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா மையத்தின் முதலிடத்தில் விவேகானந்தர் பாறை உள்ளது. கடல் நடுவே படகு பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதை, `திரில்’ அனுபவமாக சுற்றுலா பயணிகள் கருதுவதால் இதற்கான கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இதுதவிர கன்னியாகுமரி அருங்காட்சியகம், காந்திமண் டபம், திரிவேணி சங்கமம், காமராஜர் மணிமண்டபம், பகவதி யம்மன் கோயில், சூரிய அஸ் தமன மையம் எங்கும் கோடை விடுமுறையை களிக்க வந்துள்ள சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கடலோரம் அமைந்துள்ள காட்சி கோபுரம் சுற்றுலா பயணிகளின் ரசனைக்கு விருந்து படைக்கும் சிறந்த மையமாக உள்ளது. ஆனால் இவை தற்போது சுற்றுலா பயணிகளுக்கு உதவாத நிலையில் பெயருக்கேற்றவாறு காட்சி பொருளாகி விட்டது. இதுகுறித்து ஏற்கனவே `தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியான நிலையில் காலையியும், மாலையிலும் மட்டுமே சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை கண்டுகழிக்கும் மையமாக இது மாறிவிட்டது. பகலில் திறக்க நடவடிக்கை இல்லை.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்சி கோபுரத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். குடும்பத்துடன் கன்னியாகுமரியை சுற்றிபார்த்து வரும் நிலையில் சிறுவர்கள், மற்றும் இளைஞர்கள் காட்சி கோபுரத்தை பார்க்கும் ஆர்வம் மிகுதியில் பூட்டியே கிடக்கும் காட்சி கோபுர கேட்டின் மேல் ஏறி குதித்து செல்கின்றனர். ஏற்கனவே ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்ட அங்கு தனியாக சிறுவர்கள் செல்வதால் கடல் அலை மற்றும் சுழலில் சிக்கும் அபாயம் உள்ளது.
கன்னியாகுமரி சீஸன் நேரத்திலும் காட்சி கோபுரம் நேற்று வரை பகலில் திறக்கப்படவில்லை.