

எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் கருப்ப சாமி பாண்டியன். ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த போதும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
பின்னர் கட்சித் தலைமையுடன் மோதல் ஏற்பட்டு நெடுஞ்செழியன் தலைமையில் அமைந்த ஐவர் கூட்டணியில் முக்கிய பொறுப்பு வகித்தார். அதன்பின் திமுகவில் இணைந்தார். திமுகவில் கருப்ப சாமி பாண்டியனுக்கும், சட்டப் பேரவை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கும் இடையே மோதல் போக்குதான்.
இந்தச் சூழ்நிலையில் இரு மாதங்களுக்கு முன் நடைபெற்ற கட்சி அமைப்பு தேர்தல் இந்த மோதலை மேலும் தீவிரமாக்கியது. நெல்லை மாவட்டத்தை கிழக்கு, மேற்கு, மத்திய, மாநகர் என 4 மாவட்டங்களாக பிரித்தது கட்சித் தலைமை. இது கருப்ப சாமி பாண்டியனுக்குப் பிடிக்க வில்லை. மாநகர, புறநகர் என 2 மாவட்டங்களாகவே தொடர வேண்டும் என அவர் வலியுறுத் தினார். ஆனால், கட்சித் தலைமை இதனை ஏற்காமல் 4 மாவட்டங் களாகப் பிரித்து அமைப்பு தேர்தலையும் நடத்தியது. `கலெக்ட ராக இருந்துவிட்டு வட்டாட்சியராக பணியாற்ற முடியாது’ என ஒரு கூட்டத்தில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். ஒருங் கிணைந்த மாவட்டத்துக்கு செயலாளராக இருந்துவிட்டு, ஒரு சிறிய பகுதிக்கு மட்டும் மாவட்டச் செயலாளராக இருக்க முடியாது என்பதைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
மகனை செயலாளராக்க முயற்சி
இருப்பினும் தனது மகன் சங்கரை மத்திய மாவட்டச் செய லாளர் ஆக்க முயற்சி செய்தார். அவரை எதிர்த்து கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளராக இருந்த அப்துல் வகாப் களம் இறங்கினார். நகரச் செயலாளர் கள், ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் வகாப் பக்கம் நின்ற தால் தனது மகனால் ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்த கருப்பசாமி பாண்டியன், அவரை போட்டியில் இருந்து விலகச் செய்தார். அதில் இருந்தே கட்சித் தலைமை மீது கருப்பசாமி பாண்டியன் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சி நிகழ்ச்சி எதிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். அவர் அதிகமுகவில் சேரப் போகிறார் என்ற செய்தி அண்மைக் காலமாக காற்றில் உலா வந்தது.
அதை உறுதிபடுத்தும் வகை யில் கருப்பசாமி பாண்டியனும் அதிமுகவுக்கு தூதுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தலைமையிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை.
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை தொடர்ந்து, திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள கருப்பசாமி பாண்டியனின் கட்சி அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்கள் சிலர் பட்டாசு வெடித்ததாகவும், அதனை கட்சி அலுவலகத்துக்கு வெளியே வந்து கருப்பசாமி பாண்டியன் வேடிக்கை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இதன் அடிப்படையில் அவரை கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கருப்பசாமி பாண்டியனின் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டபோது அவர் பேச மறுத்துவிட்டார். அவரது உதவியாளரே போனை எடுத்து `அண்ணாச்சி இப்போதைக்கு எதுவும் பேச விரும்பவில்லை’ எனக் கூறிவிட் டார். இந்நிலையில் கருப்பசாமி பாண்டியன் தனது ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தனது முடிவை 2 நாட்களில் அறிவிப்பார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.