

தேசிய அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக பிளஸ் 1 மாணவர்கள் 2 பேர் நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றனர். இன்னொரு மாணவர் அடுத்த வாரம் செல்கிறார்.
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்காக ‘இன்ஸ்பயர்’ என்ற திட்டத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதன்மூலம், 50 ஆயிரம் தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்பயர் திட்டத்தின் கீழ் தேசிய அறிவியல் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் மதுரை மாவட்டம் ஞான ஒளிவுபுரம் செயின்ட் பிரிட்டோ பள்ளியின் ஏ.அபுபக்கர், திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் சுபாஷ் மெட்ரிக் பள்ளியின் டி.விக்னேஷ், திருப்பூர் நெருப்பெரிச்சல் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் வி.யுகவேந்தன் ஆகிய 3 பேரும் ஜப்பான் செல்கின்றனர். இவர்கள் பிளஸ் 1 மாணவர்கள்.
மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்காக தொடங்கப்பட்டுள்ள ஜப்பான் - ஆசியா இளைஞர் பரிமாற்று திட்டமான ‘சகுரா’ திட்டம் ஜப்பான் நாட்டு அறிவியல், தொழில்நுட்ப ஏஜென்சியுடன் இணைந்து நடத்தப்படுகிறது. ஆசிய இளைஞர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி அதன்மூலம் ஆசிய நாடுகளில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவர்களும் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், துறை செயலர் அபூர்வா, பள்ளிக்கல்வித் துறை செயலர் டி.சபிதா ஆகியோரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அபுபக்கர், விக்னேஷ் நேற்று ஜப்பான் புறப்பட்டனர். யுகவேந்தன் வரும் 14-ம் தேதி ஜப்பான் செல்கிறார்.