மதுரையில் மீண்டும் நித்யானந்தா ஆசிரமம்: தியான பீடத்தை விரிவுபடுத்த பக்தர்களிடம் நன்கொடை வசூல்

மதுரையில் மீண்டும் நித்யானந்தா ஆசிரமம்: தியான பீடத்தை விரிவுபடுத்த பக்தர்களிடம் நன்கொடை வசூல்
Updated on
1 min read

மதுரையில் மீண்டும் நித்யானந்தா ஆசிரமம் தொடங்கப்பட்டுள்ளது. தியான பீடத்தை விரிவுபடுத்த நன்கொடை வசூலும் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக இருப்பவர் அருணகிரிநாதர். இவர் 27.3.2012-ல் திடீரென நித்யானந்தாவை அடுத்த ஆதீனமாக நியமித்தார். ‘இனி ஆதீன சொத்துகளையும், 1250 ஏக்கர் நிலத்தையும் அவரே நிர்வகிப்பார் என்றும் அறிவித்தார்.

பதவியேற்பு விழாவில், ரூ.1 கோடிக்கான காசோலையை அருணகிரி நாதரிடம் வழங்கிய நித்யானந்தா, மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன் என்றார். மீனாட்சியம்மன் கோயில் உள்பட ஆதீன கோயில்கள் அனைத்தையும் மீட்பேன். மதுரையில் மருத்துவக் கல்லூரியும், 24 மணி நேர அன்னதான சேவையும் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் நித்யானந்தாவின் நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. சைவ சமய ஆதீனகர்த்தர்கள் கூடி, நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால், அருணகிரிநாதரை நீக்கவும், ஆதீனத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதிர்ச்சியடைந்த அருணகிரிநாதர், 19.10.12-ல் நித்யானந்தாவை பதவியிலிருந்து நீக்கினார். அதோடு தனக்கும், மதுரைக்குமான தொடர்பு அறுபடுவதை விரும்பாத நித்யானந்தா, நான் மதுரை ஆதீனத்துக்கு செல்லவும் பூஜைகள் செய்து வழிபடவும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மதுரையில் தற்போது நித்யானந்தா தியானபீடம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை விரகனூர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே மேலத்தெருவில் செயல்படும் இந்த ஆசிரமத்தில் தினசரி பூஜைகளும், தியான வகுப்புகளும் நடைபெறுகின்றன. ஒரு பெண் உட்பட 6 துறவிகள் அங்கு தங்கியுள்ளனர்.

இதுபற்றி தலைமை துறவி சுத்தானந்த சுவாமியிடம் விசாரித்தபோது அவர் கூறியது: பரமஹம்ச நித்யானந்த சுவாமிகளுக்கு உலகம் முழுவதும் 147 நாடுகளில் தியான பீடங்கள் இருக்கின்றன. அவர் அருளாட்சி செய்த மதுரையில் மீண்டும் பீடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் 3 மாதங்களுக்கு முன்பு இங்கே நிரந்தர பீடம் அமைக்கப்பட்டது. 70 ஆண்டு பழமையான இந்த வீடு, நித்யானந்தாவின் சீடர் ஞானசொரூபானந்தாவுக்கு சொந்தமானது.

இந்த வீட்டை கோயில்போல மாற்றி, கருவறையில் மீனாட்சி, ஈஸ்வரர் சிலைகளுடன் நித்யானந்த சுவாமியின் சிலையையும் பிரதிஷ்டை செய்துள்ளோம்.

இங்கே அதிகாலை 3.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து ருத்ரயாகம், மகேஸ்வர பூஜை, பாத பூஜை, தியானம், மங்கல ஆரத்தி போன்றவற்றுடன் 3 வேளை நைவேத்தியமும் படைக்கப்படுகிறது.

மதுரையில் 24 மணி நேர அன்னதான சத்திரம், மருத்துவக் கல்லூரி போன்றவை அமைக்க வேண்டும் என்ற நித்யானந்தரின் திட்டம் கைவிடப்படவில்லை. ஆனால், அதற்கு பிடதியில் இருந்து பணம் வாங்க நாங்கள் விரும்பவில்லை. எனவே பக்தர்களிடமும், பூஜை மற்றும் தியானத்துக்கு வருபவர்களிடமும் நன்கொடை திரட்டி வருகிறோம் என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in