பொள்ளாச்சி: பயனாளிகளுக்கு வழங்காமல் ரேஷன் கடைகளில் கிடப்பில் போடப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்

பொள்ளாச்சி: பயனாளிகளுக்கு வழங்காமல்  ரேஷன் கடைகளில் கிடப்பில் போடப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்
Updated on
1 min read

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைக்காக பதிவு செய்த பயனாளிகளுக்கு அதற்கான அட்டையை வழங்காமல் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த பயனாளிகளுக்கு அதற்கான பதிவு அட்டை வழங்கப்படுகிறது. இதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 6.50 லட்சம் பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவக் காப்பீட்டு அட்டையை பெறுவதற்கான பதிவு மையம், ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. குடும்ப அட்டையுடன் சம்பந்தப்பட்ட பகுதியின் கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் சீட்டைப் பெற்றுவருபவர்களின் பெயர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அதற்கான அட்டை வழங்கப்படுகிறது.

பதிவு செய்த பயனாளிகளுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மூலமாக அட்டைகள் ஒப்படைக்கப்படுகின்றன. இவ்வாறு, கோவை மாநகராட்சி 45-வது வார்டு சங்கனூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவ அட்டைக்கு பதிவு செய்த பயனாளிகளுக்கு அட்டைகள் தயாராகியும் விநியோகிக்கப் படாமல் நியாயவிலைக் கடைகளில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சங்கனூர் கிராம நிர்வாகத்துக்கு உட்பட்ட கண்ணப்ப நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் இவ்வாறாக ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படாமல் வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அப் பகுதியைச் சேர்ந்த பயனாளி ஒருவர் கூறும்போது,

“கடந்த சில மாதங்களாக மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை ஒப்படைக்காமல் இங்குள்ள நியாயவிலைக் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைத்துள்ளனர். குறிப்பிட்ட அட்டைகளை வி.ஏ.ஓ. மூலமாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அந்த பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதால் அட்டைகளை பெற முடியவில்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் கூறும்போது,

“கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வரும் பயனாளிகளுக்கு உடனடியாக அட்டையை விநியோகித்து விடுவோம். மருத்துவக் காப்பீட்டு பதிவுக்காக, அவ்வப்போது கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலமாக ஒருங்கிணைத்து நடத்தப்படும்போது பதிவு செய்த பயனாளிகளுக்கான அட்டைகளை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்துவிடுவோம். அவர்கள்தான் சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் அட்டையைக் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in