

சென்னை எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரில் கிளினிக் நடத்துகிறார் ஜெயந்தி (35). குறைந்த செலவில் பிரசவம் பார்ப்பதால், அப்பகுதியைச் சேர்ந்த ஏழை மக்கள் இவரிடம் பிரசவத்துக்கு வருகின்றனர். ஆவடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி சங்கீதாவை (26) பிரசவத்துக்காக ஜெயந்தியிடம் அழைத்து வந்தார். திருவொற்றியூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைத்து கடந்த 8-ம் தேதி சங்கீதாவுக்கு பிரசவம் பார்த்தார் ஜெயந்தி. பின்னர் அங்கிருந்த சங்கீதாவின் கணவரிடம் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது என்று கூறி, இறந்த ஒரு பெண் குழந்தையின் உடலை காட்டியுள்ளார்.
சங்கீதாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து, இறந்த பெண் குழந்தையின் உடலை பார்த்தபோது, இது இப்போது பிறந்த குழந்தை போல தெரியவில்லை. இது சங்கீதாவுக்கு பிறந்த குழந்தையில்லை என்று வாக்குவாதம் செய்தனர். உடனே அவர்களை ஜெயந்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸார் ஜெயந்தியிடம் நடத்திய விசாரணையில், "கார்த்திகேயன் - சங்கீதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தையை காசிமேட்டை சேர்ந்த புவனேஸ்வரியிடம் விற்றுவிட்டேன். குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் ஸ்டான்லி மருத்துவமனையில் கண்ணாடி அறையில் வைத்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
மருத்துவமனையில் புவனேஸ்வரியின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தையை மீட்டு, கார்த்திகேயன் - சங்கீதா தம்பதியிடம் போலீஸார் ஒப்படைத்தனர். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை கடத்தல் வழக்கில் போலீஸார் ஜெயந்தியை கைது செய்தனர்.