

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. மார்ச் 1-ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 148 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இந்த காலத்தில் பெய்யும் சராசரி மழை அளவைவிட 77 சதவீதம் அதிகமாகும். தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவிக்கும்போது, “இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்று மேல் அடுக்கு சுழற்சி தற்போது குமரி அருகே உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்யும்” என்றார்.