Last Updated : 25 May, 2014 10:06 AM

 

Published : 25 May 2014 10:06 AM
Last Updated : 25 May 2014 10:06 AM

வெற்றி மழையிலும் அணையாத உள்கட்சி புகைச்சல்!

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி யில் 1.6 லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் அதிமுக வெற்றி பெற்றாலும், திமுக தலைவர் கருணாநிதி வென்ற திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் திமுக 2,037 வாக்குகள் கூடுதலாகப் பெற்றதால், அதிமுக வட்டாரம் உற்சாகம் இழந்து காணப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்றது. 40 மக்களவைத் தொகுதி களிலும் படுதோல்வி அடைந்த திமுக கூட்டணிக்கு ஆறுதலாக, திருவாரூர், பாளையங்கோட்டை, கூடலூர், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டும் சில ஆயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத் துள்ளன.

அத்தனை தொகுதிகளும் பறிபோன நிலையில், திருவாரூர் திமுகவினர் சிலர் " திருவாரூரில் திமுக முன்னிலை" என போஸ்டர் ஒட்டி தங்களை தேற்றிக் கொண்டனர்.

அதிமுக உள்ளூர் அமைச்சர் ஆர். காமராஜுக்கு எதிரான கோஷ்டியினரோ, இதையே அவருக்கு எதிரான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி பிரச்சினையை கிளப்பி வருவதோடு, மேலிடத்துக்கும் புகார்களை அனுப்பி வருகின்றனராம்.

"கடந்த மக்களவைத் தேர்தலில் இங்கு பலமாக உள்ள 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட அதிமுகவை, 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுக வெற்றி பெற்றது.

இப்போது தமிழகம் முழுவதும் திமுக தோற்றாலும், திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதி என்பதால்தான் திருவாரூரில் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன" என்கிறது திமுக வட்டாரம்.

"நாகை மக்களவைத் தொகுதியில் நாகை, திருவாரூர், கீழ்வேளூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

இதில், திருவாரூரில் மட்டும் மிகக் குறைந்த வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகித்துள்ளதை பெரிதாக்குகின்றனர், அமைச்சர் காமராஜின் தொகுதியான நன்னி லத்தில் திமுகவை விடவும் 28,497 வாக்குகள் கூடுதலாகப் பெற்றதை வசதியாக மறந்துவிட்டுப் பேசுகின்றனர்" என்கிறது அதிமுக வட்டாரம்.

பலவித சாகசங்களை செய்து 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாகை தொகுதியை அதிமுக கைப்பற்றினாலும், திருவாரூரில் 2 ஆயிரம் வாக்குகள் திமுக கூடு தலாகப் பெற்றதால், மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் தவிக்கிறதாம் அமைச்சர் காமராஜ் வட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x