

பவானிசாகர் அருகே விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் வேண்டி பூனையை மண் சட்டியில் வைத்து மண்ணில் புதைத்து, உயிருடன் வெளியே எடுக்கும் விநோத வழிபாடு நடந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கோடேபாளையம் கொளத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை யொட்டி, கோயிலில் நேற்று கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், விவசாயம் செழிக்க விநோத வழிபாடு நடத்தப்பட்டது.
இதன்படி, கிராமத்தில் உள்ள 25 காளைகளுக்கு மஞ்சள் பூசி, மாலைகள் சூட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப்பட்டன. கோயில் முன் குழி தோண்டப்பட்டு அதன் அருகே மணல் கொட்டப் பட்டது.
தொடர்ந்து இரு பக்தர்கள் ஊர்கவுடர் வீட்டுக்கு சென்று மண்சட்டிக்குள் பூனை ஒன்றை வைத்து மூடியபடி ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோயில் முன் தோண்டப்பட்ட குழியின் அடிபாகத்தில் பூனையுடன் கூடிய மண்சட்டியை வைத்து அதன் மீது மணல் கொட்டினர்.
பின்னர் காளைகளை மூடப்பட்ட குழிமீது படுக்க வைத்து வழிப்பட்டனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் மணலை அகற்றி மண் சட்டியை எடுத்து திறந்தபோது, பூனை உயிருடன் இருந்ததை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். பூனை உயிருடன் வெளியே வந்தால், ஊர் செழிக்கும் என்பது ஜதீகம் என கிராமமக்கள் தெரிவித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.