

கல்லூரி வளாகங்களில் மாணவர் அமைப்புகள் சுதந்திரமாக செயல் பட அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்ததை கண்டித்து தமிழ் இளைஞர்கள் மாணவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் நடுவம், கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட 16 மாணவர் இயக்கங்கள் சார்பில் நேற்று பத்திரிகையாளர் மன்றத்தில் சந்திப்பு நடைபெற்றது.
தமிழ் இளைஞர்கள் மாண வர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பிரபாகரன் இதில் பேசியதாவது:
இந்த தடை ஐஐடி மாண வர்களுக்கான பிரச்சினை மட்டும் கிடையாது. எந்த கல்வி நிறுவனத்திலும் மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்கக் கூடாது என்று அரசு நினைக்கிறது. அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு இயங்கும் மாணவர் அமைப்புகளை எப்படி தடை செய்ய முடியும்? ஐ.நா. வகுத்துள்ள 22 மனித உரிமைகளுள் ஒன்றான கருத்துரிமையை மத்திய அரசும், ஐஐடி நிர்வாகமும் பறித்துள்ளன.
அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தின் மீதுள்ள தடையை நீக்கி, முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஐஐடி நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் சமூக நலனை கருத்தில் கொண்டு செயல்படும் மாணவர் அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.