Published : 07 May 2014 02:54 PM
Last Updated : 07 May 2014 02:54 PM

ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் தடை

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

ஜல்லிக்கட்டுக்கு வரைமுறைகளை வகுத்து, தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தையும் ரத்து செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதை எதிர்த்தும், அதற்கு விதிமுறைகளை வகுத்து 2009-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்தும் விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலத்தில் ரேக்ளா போட்டிகள் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் இதனுடன் இணைத்து விசாரிக்கப்பட்டது.

“ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகள் வதைக்கப்படுகின்றன. அவை தேவையின்றி துன்புறுப்படுத் தப்படுகின்றன. மிருக வதை தடைச் சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்துவது குற்றம்; காட்டுமிராண்டித்தனம்” என்று விலங்குகள் நல வாரியம் சார்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு சார்பில், “ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் பெரிய அளவில் துன்புறுத்தப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளை வரை முறைப்படுத்தலாம். முழுமையாக தடை விதிக்க கூடாது” என்று வாதிடப் பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திரகோஸ் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா, வடம், வாடி போன்ற பல பெயர்களிடம் மாடுகளை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், மாடுகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மிருக வதை தடைச் சட்டம் 1960-ன் கீழ், மாடுகளை துன்புறுத்தாமல் இருக்க பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

விலங்குகள் பாதுகாப்பு வாரிய உறுப்பினர்கள் டாக்டர் மணிலால் வால்யதே, அபிஷேக் ராஜே குழு கடந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாடுகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை நேரில் பார்த்து 3 அறிக்கைகள் அளித்துள்ளது.

இந்த அறிக்கைகளில் மாடுகளை வாடி வாசலில் இருந்து தள்ளிவிடுதல், வாலை கடித்தல், மதுபானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றுதல், அடித்தல் போன்ற துன்புறுத்தல்களை செய்வது நிரூபணம் ஆகியுள்ளது. மாடு மிரண்டு ஓடி பஸ் மீது மோதி இறந்துள்ளது. தடிகளுடன் பலர் துரத்தியபோது, தப்பி ஓட முயன்ற ஒரு மாட்டின் கால் உடைந்துள்ளது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. தேவையற்ற இந்நிகழ்ச்சிகள் தடுக்கப்பட வேண்டியவை. தமிழகம் உள்பட நாட்டின் எந்தப் பகுதியிலும் மாடுகளைக் கொண்டு ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது.

மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை மனிதர்களுடன் சண்டை போடவோ, இதர விலங்குகளுடன் சண்டை போடவோ துாண்டக் கூடாது. ஒவ்வொரு ஜீவராசியும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. மற்ற நாடுகளில் இந்த சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அரசியல் சாசன உரிமையாக கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். எந்த விலங்கும் துன்புறுத்தப்படாமல் இருப்பதை விலங்குகள் நல வாரியம் கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

விலங்குகளை துன்புறுத்தாமல் இருப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள், விலங்குகள் நல வாரியம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விலங்குகளை துன்புறுத்தினால், கூடுதல் அபராதம், தண்டனை வழங்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். தமிழக அரசின் 2009-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகள் சட்டம், மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்தை மீறுவதால், தமிழக அரசின் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x