

`ஊழல் குறித்து பேசுவதற்கு கருணாநிதிக்கும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் தகுதி இல்லை’ என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொள்கை அற்ற கூட்டணிகளே அமைக்கப்படுகின்றன. ஒரு தேர்தலில் அமைக்கும் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள், அடுத்த தேர்தலில் வேறு கூட்டணிக்கு தாவுகின்றன. அந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது.
அரசியலில் தூய்மை, நிர்வாகத்தில் நேர்மை, ஊழல் ஒழிப்பு, ஜனநாயக மீட்பு, மதுவிலக்கு, மதவாத எதிர்ப்பு போன்ற கொள்கைகளை அடிப்படையாக கொண்ட கூட்டணி அமைய, தமிழர் தேசிய முன்னணி முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஒரே கருத்துடைய கட்சிகளுடன் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பேசவுள்ளோம்.
மத்தியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது `2ஜி’ அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் உள்ளிட்டவை நடைபெற்றன. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் திமுகவும் பங்கு வகித்திருந்தது. எனவே, ஊழல் குறித்து பேசுவதற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் தகுதி கிடையாது.
குளச்சல் துறைமுகம்
குளச்சலில் சர்வதேச துறைமுகம் அமைய கடந்த ஆட்சியின்போது இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை கைவிட்டது. அதேபோன்று, இலங்கை அரசிடமிருந்து தற்போது எதிர்ப்பு வந்தால், அதற்கு மத்திய அரசு பணிந்துவிடக்கூடாது.
ஓராண்டுகால மோடி அரசு தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு விவகாரங்களில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை கர்நாடக, கேரள அரசுகள் மதிக்க தவறிவிட்ட நிலையில், அத்தீர்ப்புகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டது.
அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரையும் உச்சநீதிமன்றம் விடுவிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார் அவர்.
தமிழர் தேசிய முன்னணி மூத்த பொதுச்செயலாளர் பரந்தாமன், மாவட்ட தலைவர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.