Last Updated : 30 May, 2015 10:13 AM

Published : 30 May 2015 10:13 AM
Last Updated : 30 May 2015 10:13 AM

அரிய வகை ‘இறகு விருந்தினர்’ இப்போது இங்கு வருவதில்லை - மணலி மாதவரம் ஏரிகளின் பரிதாப நிலைமை

தொழிற்சாலை மாசுபாடு களால் சூழல் முக்கியத் துவம் வாய்ந்த பல பகுதி களில் அரிய வகை பறவைகளின் வரத்து குறைந்துள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு கண்முன் உள்ள உதாரண மாக சென்னையில் உள்ள மணலி, மாதவரம் ஏரிகள் விளங்குகின்றன.

சென்னையின் முக்கிய தொழிற்பேட்டையான மணலி, மாதவரத்தில் எண்ணெய் சுத்தி கரிப்பு நிறுவனங்கள், பால் பண்ணை உள்ளிட்ட பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் எல்லாவற்றுக்கும் மணலி மற்றும் மாதவரம் ஏரிகள் தான் ஒரே போக்கிடமாக இருக்கின்றன.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது மணலி ஏரி. வடகிழக்கு பருவமழைக் காலங் களில் இந்த ஏரியில் 7 முதல் 8 அடிக்கு நீர் நிரம்பியிருக்கும். அப்போதெல்லாம் இங்கு அதிக மாக பறவைகள் தென்படும். ஆனால், ஏரிக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் அந்த ஏரி யில் தேங்கும் வெள்ள நீரை வெளியேற்றிவிடுகின்றனர். இதனால் நீர் அளவு குறையும். மேலும் அங்கிருக்கும் பறவைகள் வேறு இடங்களுக்குச் சென்றுவிடும்.

இதேபோல சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மாதவரம் ஏரி. இந்த இரண்டு ஏரிகளும் அருகில் உள்ள கிராமங்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இயங்கி வந்தன.

ஆனால், அங்கு சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளால் ஏரி களின் கரைகள் காணாமல் போய்விட்டன. இதனால் தொழிற் சாலைகளில் இருந்து வெளியேற் றப்படும் கழிவுகளும், குப்பை களும் இங்கே தேங்கிவிடுகின் றன. இதன் காரணமாக தற்போது இந்த இரண்டு ஏரிகளும் வறண்டு காணப்படுகின் றன.

பறவைகளின் வாழிடம்

இதுபோன்ற ஏரிகளில் நீர்ப் பறவைகள் அதிகளவில் தென் படும். மணலி மற்றும் மாதவரம் ஏரிகளில் நீளவால் தாழைக்கோழி (பெசன்ட் டெய்ல்ட் ஜசானா), வலசை வாலாட்டி (மைக்ரேட்டரி வேக்டெய்ல்), ஆலாக்கள் (டெர்ன்), உள்ளான் (சேன்ட்பைப்பர்), நீர் காகம் (கார்மொரன்ட்) உள்ளிட்ட 55 வகையான பறவைகளுக்கு ஏற்ற வாழிடங்கள் இருந்தன.

இது 2006-ம் ஆண்டு கணக்கு. தற்போது இந்தப் பகுதிகளில் பற வைகள் கணக்கெடுப்பு நடத்தினால், இவற்றுள் ஒன்றைக்கூட நம்மால் காண முடியுமா என்பது சந்தேகமே.

பறவைகள் வரத்து குறைவு

மணலி, மாதவரம் ஏரிகளில் நடைபெற்று வரும் மாற்றங்களை பல ஆண்டுகளாகப் பதிவு செய்து வரும் பறவையியலாளரும், 'நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் தலைவருமான‌ திருநாரணன் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

“இதுபோன்ற நீர்ப் பறவை களுக்கு நீர்நிலைகளில் மிதக்கும் தாவரங்கள் அவசியம். அந்தத் தாவரங்கள் இருக்கும் இடங்களில் தான் அவை இனப்பெருக்கம் செய்யும். அதேபோல அவற்றுக்கு அங்குள்ள மீன்கள்தான் மிக முக்கிய இரையாகவும் இருக்கும்.

ஆனால், தொழிற்சாலைகளில் இருந்து இந்த ஏரிகளில் வெளியேற் றப்படும் கழிவுகள் காரணமாக இந்த நீர்நிலைகளில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. அதன் காரணமாக மீன்கள் இறக்கின்றன. அதனால் பறவைகளுக்கு இரை தட்டுப்பாடு ஏற்படுகிறது.

அதேபோல நீர்த் தாவரங்கள் அழிந்து, ஆகாயத் தாமரைகள் வளர்ந்துவிடுகின்றன. இதனால் ஏரி வறண்டு போகும் அபாயம் ஏற்படும்.

இவ்வாறு தங்களின் வாழிடங்கள் அழிந்து வருவதால் தற்போது இங்கு நீர்ப் பறவைகளின் வரத்து முற்றிலுமாக இல்லை என்றே சொல்லலாம்” என்றார்.

பாதுகாப்பது எப்படி?

மணலி மற்றும் மாதவரம் ஆகிய இரண்டு ஏரிகளும் 'இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF)' எனும் அமைப்பு வெளியிட்ட 'உலகெங்கும் உள்ள ஈர நிலங்களின் பட்டியலில்' இடம்பெற்றிருப் பவை.

தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட மிகச் சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் நீளவால் கோழி பறவையினங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் காணப் படுவது மிகவும் அரிது.

அப்படியிருக்கும்போது, மணலி மற்றும் மாதவரம் ஏரிகளில் இவை தென்படுகின்றன என்றால், அந்த ஏரிகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த ஏரிகளை நீளவால் கோழிகளின் சரணாலயமாக அறி விக்க வேண்டும்.

மேலும் இவை சென்னையின் மிக முக்கிய ஈரநிலங் களாக இருப்பதால் இவற்றை 'பாதுகாக்கப்பட்ட பகுதியாக'வும் அரசு அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் இந்த ஏரிகள் தூர்வாரப்பட்டு, தொழிற் சாலைகளின் கழிவுகள் கலப் பது தடுக்கப்பட்டு அவை பாதுகாக் கப்படும். அப்போது மீண்டும் மேற் கண்ட 'இறகு விருந்தினர்' களின் வரத்து அதிகரிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

(கட்டுரையாளர், தொழிற்சாலை மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ’19-வது ஊடக நல்கை’ (Centre for Science & Environment, CSE - 19th Media Fellowship) பெற்றவர்).

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x