

எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை உயர்வு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் 18 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 55 காசு என்ற அளவிலும் என விலையை அபரிமிதமாக உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், மீண்டும் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 37 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 98 காசு என்ற அளவிலும் உயர்த்தியுள்ளது.
விலை உயர்வுக்கு கடந்த முறை தெரிவித்த அதே காரணங்களை தற்போதும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்தியுள்ளன.
அவ்வப்போது அமெரிக்க டாலருக்கு ஏற்படும் தேவையைப் பொறுத்தே இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு அல்லது உயர்வு ஏற்படும். இதற்கான முழுப் பொறுப்பும் மத்திய அரசிடமே உள்ளது.
நான் கடந்த முறை தெரிவித்ததைப் போல மத்திய அரசின் வரிவிதிப்பு கொள்கைகளின் மீது அந்நிய முதலீட்டாளர்களின் அவநம்பிக்கை, மத்திய அரசு எடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய அந்நிய முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு போன்றவைகளின் அடிப்படையிலேயே ரூபாயின் மதிப்பில் ஏற்றத்தாழ்வுகளும், மாறுபாடுகளும் ஏற்படும்.
ரூபாய் மதிப்பின் சரிவிற்கு முக்கிய காரணம் அந்நிய நிதி நிறுவனங்கள் தங்களது portfolio முதலீட்டினை திருப்பி எடுத்துச் செல்வதேயாகும். எனவே, இது போன்று ரூபாய் மதிப்பில் அவ்வப்போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது.
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையையே தற்போதைய மத்திய பாரதிய ஜனதா அரசும் கடைபிடித்து வருகிறது.
இதன் காரணமாகவே மாதம் இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு அதன் காரணமாக விலைவாசியில் ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்த போது மத்திய அரசு அதன் முழுப் பலனையும் மக்களுக்கு அளிக்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத் தீர்வைகளை உயர்த்தியதன் மூலம் சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை.
மேலும், பெட்ரோலியப் பொருட்களின் ஆயத் தீர்வையில் 4 ரூபாய் ‘சாலை செஸ்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இது மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படாத வருவாயாக மாறிவிட்டது.
எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகள் உயரும். இதன் காரணமாக பண வீக்கம் அதிகரித்து ஏழை, எளிய சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும்.
எனவே, எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை உயர்வு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், நான் ஏற்கெனவே பல முறை தெரிவித்துள்ளது போல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.