Published : 08 May 2015 07:39 PM
Last Updated : 08 May 2015 07:39 PM

சிறார்களை தண்டிப்பதை விட சீர்திருத்துவதே சிறந்தது: ஸ்டாலின்

சிறார்களை சீர்திருத்தி, அவர்கள் திருந்தி வாழ வழி வகுப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டுமே தவிர, அவர்களை தண்டிக்கும் விதத்தில் நமது குற்றவியல் நீதி பரிபாலன முறை அமைந்து விடக் கூடாது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில்,'' சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கவனிப்பு)ச் சட்டத் திருத்த மசோதா 2014-யை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது. இச்சட்ட திருத்தம் கொடும் குற்றங்களில் ஈடுபடும் சிறாரின் வயது 16 லிருந்து 18க்குள் இருக்குமெனில்,அந்தக் குற்றத்தை குழந்தை செய்திருக்கிறதா அல்லது வயதுக்கு வந்த இளைஞர் செய்திருக்கிறாரா என்பதை சிறார் சீர்திருத்த வாரியம் முடிவு செய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் வளரும் பருவத்திற்கும், வயதுக்கு வந்த பருவத்தை அடைவதற்கும் இடையில் உள்ள கட்டத்தில் இருக்கும் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவதை வாரியங்கள் துல்லியமாக நிர்ணயிப்பது கூறுவது சுலபமான காரியம் அல்ல என்றே தோன்றுகிறது.

சிறார்கள் ஏன் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுவதாலும், வறுமையாலும், வேறு குற்றங்களுக்கு கடத்தப்படுவதாலும், தகாத முறையில் நடத்தப்படுவதாலும் தான் சிறார்கள் பெரும்பாலும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே சமுதாய ரீதியாக சிறாருக்கு இருக்கும் பிரச்சினைகளை இப்படி சட்டத்தின் மூலம் அவசரமாக தீரத்து விட முடியாது.

ஏனென்றால், சிறார்களை சீர்திருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நீதி பரிபாலன முறை இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு தண்டனை வழங்கும் விதத்தில் இருக்கக் கூடாது.

நம் நாட்டில் இப்போது கொண்டு வரப்படுவது போன்ற சட்டதிருத்தங்களை ஏற்கனவே அமல்படுத்தியுள்ள அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் சிறார் குற்றங்களைத் தடுக்க அந்த சட்டங்கள் போதிய அளவு கை கொடுக்கவில்லை என்பதை இப்போது உணர்ந்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள National Campaign to Reform State Juvenile Justice System வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி,"வயதுக்கு வந்தோருக்கான சிறைச்சாலைகளில் இருந்து விடுதலையான சிறார்களில் 80 சதவீதம் பேர் மீண்டும் கொடுங் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்" என்று கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் சிறார்களை சீர்திருத்தி, அவர்கள் திருந்தி வாழ வழி வகுப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டுமே தவிர, அவர்களை தண்டிக்கும் விதத்தில் நமது குற்றவியல் நீதி பரிபாலன முறை அமைந்து விடக் கூடாது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x