

‘சக்தி மசாலா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.சி.துரைசாமியின் சமூக நலப் பணிகளைப் பாராட்டி சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
‘சக்தி மசாலா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் பி.சி.துரைசாமி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கிராமத்தில் விவசாய, வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். 40 ஆண்டு களுக்கு முன்பு சிறு முதலீட்டில் வணிகத்தை தொடங்கிய அவர், தனது மனைவி டாக்டர் சாந்தி துரைசாமியின் பங்களிப்புடன் ‘சக்தி மசாலா’ நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
சக்திதேவி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மருத்துவமனை, மறுவாழ்வு மையம், சிறப்புப் பள்ளி ஆகியவற்றோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடும் பணி, அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது என்பது உட்பட பல சேவைகளை ஆற்றிவருகிறார்.
நேர்மையான வணிக நெறிமுறைகளைப் பின்பற்றி, தரமான பொருட்களை தயாரித்து வருவது மற்றும் அவரது சமூகநலப் பணிகளை பாராட்டும் விதமாக பி.சி.துரைசாமிக்கு சென்னை சத்யபாபா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
சத்யபாமா பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான ஜேப்பியார் தலைமையில் சென்னையில் கடந்த திங்கள்கிழமை நடந்த விழாவில் டாக்டர் பட்டத்தை பி.சி.துரைசாமிக்கு இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் வழங்கினார். ‘சக்தி மசாலா’ இயக்குநர் சாந்தி துரைசாமி உடனிருந்தார். இத்தகவல், சக்தி மசாலா நிறுவனம் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.l