புற்றுநோய் பாதித்தவருக்கு மாற்று சிறுநீரக பை பொருத்தி அரசு மருத்துவக் கல்லூரி சாதனை

புற்றுநோய் பாதித்தவருக்கு மாற்று சிறுநீரக பை பொருத்தி அரசு மருத்துவக் கல்லூரி சாதனை
Updated on
1 min read

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பாதித்தவருக்கு மாற்று சிறுநீரக பை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் வடிவேல் முருகன் கூறும்போது, ‘ரவீந்திரன் என்ற தொழிலாளி சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதாக சிகிச்சைக்கு சேர்ந்தார். பரிசோதித்த போது சிறுநீர் பையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. அந்த கட்டியை அகற்ற முயன்ற போது அது சிறுநீர் பையை முற்றிலுமாக பாதித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அந்த நோயாளிக்கு சிறுநீர் பை மற்றும் புரோஸ்டேட் சுரபியை அறுவை சிகிச்சை செய்து அகற்றவும், சிறுநீரை வெளியேற்ற மாற்று ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன், சிறுநீரக அறுவை சிகிச்சை துறைத்தலைவர் கண்ணன் தலைமையில், மருத்துவர்கள் பிராங்க், பிரபாகரன், பிரேமா குமாரி ஆகியோர் கொண்ட குழுவினர் , ரவீந்திரனுக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரக பையை அகற்றினர். மாற்று சிறுநீரக பை உருவாக்கப்பட்டு அதன் மூலம் இப்போது சிறுநீர் கழித்து வருகிறார்.

நலமுடன் இருக்கும் ரவீந்திரனுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அறுவை சிகிச்சை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த வகை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள ரூ.3 லட்சம் வரை செலவாகும். சிறுநீரில் ரத்தம் வந்தால் அதை அலட்சியமாக நினைக்காமல் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டும்’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in