

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரஜக்கம்மா தேவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மே 8, 9-ம் தேதிகளில் திருவிழா நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருவிழாவை தடுப்பதற்காக சிலர் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
திருவிழாவை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்த அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக நெல்லையை சேர்ந்த ஒரு அமைப்பு அறிவித்திருந்தது.
இதற்காக நேற்று காலையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நெல்லையைச் சேர்ந்த பலர் திரண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டபோது போலீஸார் அவர்களை வழிமறித்து 30 பேரை கைது செய்தனர்.