

சதுரகிரி காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி, வத்றப் அருகே உள்ள, சதுரகிரி மலையில் கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட தீடீர் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தோர் எண்ணிக்கை கூடுதலாக இருக்குமென அஞ்சப்படுகிறது.
சதுரகிரி மலையில் ஏராளமான சித்த வைத்தியத்திற்கான மூலிகை செடிகள் இருப்பதால் அதனை ஆய்வு செய்வோரும், அங்குள்ள சாமிகளை தரிசனம் செய்யும் பொருட்டு ஏராளமான பொதுமக்களும் வருவதால், அரசு கூடுதல் கவனம் செலுத்தி, உரிய மேம்பால வசதிகள், படித்துறைகள், கடும் மழை, வெள்ள காலங்களில் சமாளிக்கும் விதமாக தங்கும் இடங்கள் என உரிய வசதிகளை செய்து தர தமிழக அரசை கேட்டுக்கொள்வதோடு, இறந்தவர்கள் குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தலா ரூ. 10 லட்சம் வழங்கி உதவிட வேண்டும்'' என இரா.முத்தரசன் கூறியுள்ளார்.