ஜெயலலிதா வருகை எதிரொலி: அண்ணா சாலையில் வாகன ஓட்டிகள், பயணிகள் தவிப்பு

ஜெயலலிதா வருகை எதிரொலி: அண்ணா சாலையில் வாகன ஓட்டிகள், பயணிகள் தவிப்பு
Updated on
1 min read

போயஸ் கார்டனில் இருந்து ஆளுநர் மாளிகை, பின்னர் அங்கிருந்து அண்ணா சாலைக்கு ஜெயலலிதா திரும்பும் நிலையில், சென்னை - அண்ணா சாலையில் பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

கிண்டி, வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து அண்ணாசாலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிண்டியில் சுமார் 5000-க்கும் அதிகமான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.

பேருந்தில் பயணிகள் படிகளில் தொங்கிக்கொண்டே சென்றனர். ஆனால், இதை ஒழுங்குபடுத்த காவல்துறை இல்லாததால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வழிநடத்துவதில் கவனம் செலுத்தும் காவல்துறை பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டத் தவறிவிட்டது என்று பொதுமக்கள் கவலை வெளியிட்டனர்.

"கிண்டியில் இருந்து பைக்கில் ஜெமினி பாலம் வருவதற்கு மட்டும் 2 மணி நேரம் ஆகிவிட்டது. இனி, சிம்சன் வரை செல்ல வேண்டும். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. அலுவலகத்தில் செல்போன் மூலம் பேசி பர்மிஷன் கேட்டிருக்கிறேன்" என்று ஒரு இருசக்கர வாகன ஓட்டி புலம்பினார்.

மேலும், சென்னையில் வெயிலின் தீவிரம் மிகுதியான நிலையில், ஜெயலலிதா வருகையையொட்டி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி முதல் சிம்சன் வரை பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in