

பன்னாட்டு திருக்குறள் மாநாடு, சென்னையில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சென்னையில் பன்னாட்டு திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன. எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடக்க விழா நடைபெறுகிறது.
உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் க.பசும்பொன் வரவேற்கிறார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தாண்டவன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ.ராசாராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசுகிறார். மாநாட்டு மலரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிடுகிறார்.
மலேசியா உலகத் தமிழாராய்ச்சி மன்ற தலைவர் த.மாரிமுத்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மன்னர் மன்னன், சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழக பேராசிரியர் இரா.வேல்முருகன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.