

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை வருவாய்த் துறை ஊழியர்கள் நேற்று முற்றிலுமாக புறக்கணித்தனர். ஏறத்தாழ 42 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4-ம் தேதி முதல் தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏறத்தாழ 71 ஆயிரம் பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டுள்ளனனர்.இந்நிலையில், அதிக பணி நெருக்கடி காரணமாக நவ.18 முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப் போவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
உரிய பயிற்சி அளிக்காமலும், நிதி ஒதுக்கீடு செய்யாமலும் அவசரகதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்வதாகவும், இதனால் கடும் மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வருவாய்த் துறை ஊழியர்கள் நேற்று பணிக்கு வந்தபோதும் எஸ்ஐஆர் பணிகளை முற்றிலுமாகப் புறக்கணித்தனர்.
படிவங்களைப் பெறுவது, பூர்த்தி செய்த படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவருமான எம்.பி.முருகையன் கூறும்போது, “கிராம உதவியாளர்கள், விஏஓ-க்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், சர்வேயர்கள், கள உதவியாளர்கள் என வருவாய்த் துறையில் மட்டும் 42 ஆயிரம் பேர் எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டாலும், எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள மாட்டோம். அவசரம் அவசரமாக எஸ்ஐஆர் பணியை மேற்கொள்வதை அரசு கைவிட வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “எஸ்ஐஆர் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று, போதிய காலஅவகாசம் வழங்கி, தகுதியான வாக்காளர்கள் விடுபடாமல் பட்டியல் தயாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.