

நேபாள நிலநடுக்கத்தின்போது 3,600 அடி உயர மலைப் பகுதியில் சிக்கிய 6 டாக்டர்கள் உள்பட 10 பேர் 6 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு மே 1-ம் தேதி சென்னை திரும்பியுள்ளனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் பணியாற்றும் டாக்டர் கள் ஜோதிசங்கர், ராஜஸ்ரீ, ஸ்ரீபிரியா ராஜன், ஜெயஸ்ரீ நரசிம்மன், பிரவின் குமார், வாணி மற்றும் அவர்களது குடும்பத்தினர் சித்தார்த் (13), சம்ஸ்ருதி (12), பூஜா (11), முன்னாள் ராணுவ வீரர் ராம்குமார் ஆகிய 10 பேர் மலையேற்றத்துக்காக கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நேபாளம் சென்றனர்.
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது அவர்கள் 3,600 அடி உயர மலைப் பகுதியில் சிக்கிக் கொண்டனர். அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து டாக்டர் பிரவின்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘நாங்கள் 10 பேரும் ஒரு குழுவாக நேபாளத்தில் உள்ள அன்ன பூர்ணா சர்க்யூட் என்ற பகுதிக்கு மலையேற்றம் செல்ல திட்டமிட் டோம். 5,400 மீட்டர் உயரமுள்ள தொரங்கலா பாத் என்ற இடத் துக்குச் செல்வதே எங்கள் திட்டம். இதற்காக கடந்த 6 மாதங்களாக நாங்கள் பயிற்சி செய்து வந்தோம்.
ஏப்ரல் 18-ம் தேதி விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந் தோம். அங்கு ஒருநாள் தங்கி பசுபதிநாதர் கோயில் உள்ளிட்ட சில இடங்களைப் பார்த்தோம். பின்னர் 20-ம் தேதி காத்மாண்டுவில் இருந்து 8 மணி நேர பஸ் பயணத் தில் புல்புலே என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து 2 வழிகாட்டிகள், 6 போர்ட்டர்கள் உதவியுடன் மலையேற தொடங் கினோம். 6 மாத கனவு நனவான மகிழ்ச்சியில் மலையில் நடைபோட் டோம். ஏப்ரல் 25-ம் தேதி மதியம் புல்புலேவில் இருந்து 2,800 மீட்டர் தொலைவில் உள்ள சாமே என்ற இடத்தை அடைந்தோம். ஒரு பக்கம் பாய்ந்தோடும் நதி, மறு பக்கம் அழகிய மலைகள் என அந்த இடம் இயற்கையின் அற்புதம்.
இமயத்தின் அழகை ரசித்தபடி நடந்து கொண்டிருந்த போது திடீ ரென எதிரே இருந்த மலையில் பாறைகள் உருண்டன. காற்று வேக மாக வீசத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்தாலும் இயற்கையின் விளையாட்டு என ரசிக்கத் தொடங்கி னோம்.
ஆனால் சில நிமிடங்களில் எங்கள் கண் முன்னே எதிர் பகுதியில் இருந்த மலை சரியத் தொடங்கியது. நாங்கள் நின்றிருந்த மலையிலும் பாறைகள் உருண்டன. 10 பேரும் சிதறி அங்கும் இங்கும் சமவெளியை நோக்கி ஓடினோம்.
என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் திடீரென மலையில் இருந்து பனி கொட்ட ஆரம்பித் தது. எங்கள் கைபேசி வேலை செய்யவில்லை. எங்கள் வழிகாட் டிக்கு அவரது அலுவலகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு மூலம் நேபாளத்தில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
சற்று நேரத்தில் நிலைமை சரியானதால் அங்கிருந்து 3,700 மீட்டர் உயரமுள்ள பிசாங் என்ற சிறிய கிராமத்தை அடைந்தோம். அங்கு சிறிய கடையில் உணவருந் திக் கொண்டிருந்தபோது மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட் டது. சாப்பாட்டை அப்படியே போட்டு விட்டு ஓடினோம். 2 வழிகாட்டிகளும் எங்களுக்கு தைரியமூட்டினார்கள். ஆனால், 6 போர்ட்டர்களில் மூவர் எங்களால் இனிமேல் தொடர முடி யாது எனக் கூறி சென்றுவிட்டனர்.
பின்னர் ஆபத்தான ஜீப் பயணம் மூலம் புல்புலே வந்தோம். 28-ம் தேதி இரவு அருகில் உள்ள பெசி சாகரில் தங்கினோம். 29-ம் தேதி வேன் மூலம் கோரக்பூர் வந்து, அங்கிருந்து ரயில் மூலம் டெல்லி வந்தடைந்தோம்.
பின்னர் விமானம் மூலம் மே 1-ம் தேதி 10 பேரும் பாதுகாப்பாக சென்னை வந்து சேர்ந்தோம். மரணத் தின் விளிம்புக்கு சென்று மீண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்றார் டாக்டர் பிரவின்குமார்.
உதவியவர்களுக்கு உதவி
தில், சகாதேவ் என்ற 2 வழிகாட்டிகளும், 3 போர்ட்டர்களும் எங்களுக்கு தைரியமூட்டி கோரக்பூர் எல்லை வரை பாதுகாப்பாக அழைத்து வந்து சேர்த்தனர். பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ஆபத்தான நேரத்தில் எங்களுக்கு உதவி செய்தனர். நிலநடுக்கத்தில் தில், சகாதேவ் இருவரின் குடும்பமும், கிராமமும் பாதிக்கப்பட்டுள்ளன. எங்களைக் காப்பாற்றிய வழிகாட்டிகள், போர்ட்டர்களுக்கும், அவர்களின் கிராமத்துக்கும் தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம் என டாக்டர் பிரவின்குமார், ஸ்ரீபிரியா ராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.