Published : 14 May 2015 01:28 PM
Last Updated : 14 May 2015 01:28 PM

குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த முடிவை கைவிடுக: வைகோ

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை மே 13 ஆம் தேதி, ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி தருகிறது.

பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், விளையாட்டுத்துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

குடும்பப் பாரம்பரிய தொழில்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதை பெற்றோர்கள் சட்டபூர்வ உரிமையாகக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருவது, ராஜாஜி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குலக்கல்வித் திட்டத்தைத்தான் நினைவூட்டுகிறது.

ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போர்க்கோலம் பூண்டதன் விளைவாக, ராஜாஜி முதல்வர் பதவியை விட்டு வெளியேறியதும், பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றதும் வரலாற்றில் மறக்க முடியாதவை.

பா.ஜ.க. அரசு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஊக்கம் தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவதை தடை செய்வதும், குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த தண்டனையை மூன்று ஆண்டுகாலம் உயர்த்தவும், தண்டத் தொகையை 50 ஆயிரம் வரை அதிகரிக்கவும், உத்தேச சட்டத் திருத்தம் வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு சட்டபூர்வ அனுமதி அளித்துவிட்டு, சில தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு தடை என்பதும், சிறைத்தண்டனை, தண்டத்தொகை அதிகரிப்பு என்று சட்டத் திருத்தம் கொண்டு வருவதில் எந்தப் பயனும் இருக்காது.

இதுமட்டுமின்றி, தற்போது கொண்டுவரப்படும் குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், 2010 இல் நடைமுறைக்கு வந்த, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு முரண் ஆனதாக இருக்கிறது. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை கட்டாயக் கல்வி அளிக்க பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துவதை இந்தச் சட்டத்திருத்தங்கள் நீர்த்துப்போகச் செய்துவிடும்.

மக்களின் சமூகப் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டுதான் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மத்திய அரசு குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x