Published : 30 May 2015 08:15 AM
Last Updated : 30 May 2015 08:15 AM

மத்திய அரசின் மானிய விவரங்களை தெரிவிக்காமல் கல்விக் கடனுக்கு முழு வட்டி வசூலிப்பு: வங்கிகள் மீது `உங்கள் குரலில் வாசகர் புகார்

கல்விக் கடனுக்கு மத்திய அரசு வழங்கும் வட்டி மானிய விவரங்களை தெரிவிக்காமல் அவர்களிடமிருந்து வங்கிகள் முழு வட்டி வசூலிப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிக்கப்படுவதாக உங்கள் குரலில் வாசகர் புகார் கூறியுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள மருத் துவம்,பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., போன்ற அனைத்து படிப்புக ளுக்கும் கல்விக் கடன் வழங்கப் படுகிறது. இதன்படி ரூ.4 லட்சம் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கல்விக் கடன் கிடைக்கும். 4 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை கடன் பெற பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெறுவதாக இருந்தால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும்.

பெற்றோரது ஆண்டு வரு மானம் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பெறும் கல்விக் கடனுக்கு மத்திய அரசின் மானியத் திட்டத்தின் கீழ் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டித் தொகை மாணவர்கள் கல்வி பயின்று வேலைக்குச் செல்லும் காலம்வரை வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த மானியத் திட்டம் குறித்து வங்கிகள் மாண வர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவிக் காமல் வட்டியை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வடபழனியைச் சேர்ந்த ஜெயபால் என்ற வாசகர் `தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு கூறியதாவது:

எனது மகள் பொறியியல் படிப்பில் சேருவதற்காக கடந்த 2008-ம் ஆண்டு பொதுத்துறை வங்கி ஒன்றில் கல்விக் கடன் வாங்கினோம். 2012-ம் ஆண்டு படிப்பை முடித்த எனது மகளுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் வேலை கிடைத்தது. இந்நிலையில், வங்கி நிர்வாகம் நான் வாங்கிய கடனுக்கு ஆரம்பம் முதல் வட்டி செலுத்த வேண்டும் என நிர்ப்பபந்திக்கிறது. எனக்கு வட்டியில் மானியம் வழங்க வங்கி நிர்வாகம் மறுக்கிறது.

இவ்வாறு ஜெயபால் கூறினார்.

இதுகுறித்து, கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் அமை ப்பாளர் ராஜ்குமார் கூறும்போது, “பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், அவர்களது பிள்ளை கள் கல்விக் கடன் பெறும் போது வட்டி மானியம் வழங்கப்படும் என்று 2009-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து வங்கி மேலாளர்கள் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவிப்பதில்லை. வங்கி மேலாளர்கள் தங்களுடைய வங்கிகளில் இந்த விவரங்களை தகவல் பலகையில் விளம்ப ரப்படுத்த வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, பொதுத்துறை வங்கி மேலாளர் ஒருவர் கூறும்போது, “கல்விக் கடன் பெற எங்களை அணுகும்போது கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்து அவர்களிடம் தெளிவாக விளக்குகிறோம். ஆனால், சில பெற்றோர்கள் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் வருமான சான்றிதழ் இன்றி கடன் வாங்கி விடுகின்றனர். அதன் பிறகு மானியம் கேட்டால் எங்களால் வழங்க முடிவதில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x