

அரசு விளம்பரங்களில் முதல்வர், அரசியல் தலைவர்கள் படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடை அரசு திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு வரவேற்கத் தக்கதாகும்.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மக்கள் வரிப்பணத்தில் வெளியிடப்படும் ஊடக விளம்பரங்கள் ஆளுங்கட்சியின் புகழ்பாடும் வகையிலும், பிரச்சாரம் செய்யும் வகையிலும் தான் அமைகின்றன. ஆளுங்கட்சிகள் தங்களின் இல்லாத பெருமைகளை அரசு செலவில் பிரச்சாரம் செய்வதற்கான கருவியாகவே அரசு விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக பெருகி வந்த இந்தக் கலாச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு ஆளுங்கட்சிகளின் விளம்பர மோகத்துக்கு கடிவாளம் போட்டிருப்பது பாராட்டத்தக்கது.
ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்த அரசு விளம்பரங்களில் ஆளுங்கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறும் போது, அத்திட்டத்தையே சம்பந்தப்பட்ட தலைவர் தான் உருவாக்கியது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
இது தனிநபர் துதிபாடும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் கூறியிருக்கும் கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு முழுமையாகப் பொருந்தக் கூடியவை ஆகும்.
ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றால் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது தான் அரசியலமைப்புச் சட்டம் காட்டும் வழியாகும். இந்தப் பணியை பொறுப்புடைமையுடன் மேற்கொள்ள வேண்டியது ஆளுங்கட்சியின் கடமை ஆகும்.
ஆனால், ஒவ்வொரு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களில் படங்களை பெரிய அளவில் போட்டு, மக்கள் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களுமே அவர்களின் சொந்தப் பணத்தில் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வது தொடர்கதையாகிவிட்டது.
அதுமட்டுமின்றி, ஊடகங்களுக்கு அதிக அளவில் விளம்பரங்களைத் தருவதன் மூலம் அவற்றை தங்களின் கைப்பாவையாக மாற்றும் செயலும் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. இது ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் விளம்பரங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதைவிட அரசுத் திட்டங்களின் மூலம் தங்கள் புகழ் பாடிக்கொள்வதையே ஆளுங்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.
ஒரு கட்சி ஆட்சி செய்யும் போது அக்கட்சித் தலைவர் பெயரில் திட்டங்கள் தொடங்கப்படுவதும், அந்தக் கட்சி ஆட்சி முடிந்து வேறு கட்சி ஆட்சிக்கு வரும் போது அனைத்து திட்டங்களின் பெயர்களும் மாற்றப்படுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பெயரில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் ஆட்சி மாறியதும் புதிய முதல்வரின் பெயருக்கு மாற்றப்பட்டதும், பல்வேறு புதியத் திட்டங்கள் அப்போது முதலமைச்சராக இருந்தவரைக் குறிக்கும் வகையிலான பொதுப் பெயரில் தொடங்கி நடத்தப்படுவதும் அனைவரும் அறிந்தது தான்.
ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் விளம்பர மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மக்களின் பணத்தில் விளம்பரம் தருவதையோ, திட்டங்களைத் தொடங்கி நடத்துவதையோ இனியும் அனுமதிக்கக் கூடாது.
இதைக் கருத்தில் கொண்டு அரசு விளம்பரங்கள் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, அரசு விளம்பரங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு திட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசு செலவில் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திற்கும் தனி நபர்களின் பெயர்களையோ அல்லது அவர்களைக் குறிக்கும் பெயர்களையோ சூட்டக்கூடாது.
ஏற்கனவே அவ்வாறு பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அந்தப் பெயர்களை நீக்கிவிட்டு அனைத்துத் திட்டங்களும் அரசுத் திட்டங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேவையான விதிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.