

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டத்தை காட்டி, அதிகாரிகள் மூலமாக கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா குற்றம் சாட்டினார்.
கோவை கொடிசியா திடலில் அப்பேரவையின் வணிகர் தின மாநாடு, திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பேரவையின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் வணிகர்களின் கழுத்தில் சுருக்கு கயிறு போல் மாட்டப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து வணிகர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து 6 மாதத்துக்கு அச்சட்டம் அமலுக்குவருவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாடு அதிகாரிகள், அச் சட்டத்தின் மூலம் வணிகர்களை மிரட்டி லஞ்சம் பறித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் உணவகத்துக்குள் நுழைந்த தரக்கட்டுப்பாடு அதிகாரி, உணவில் பினாயிலை ஊற்றிச் சென்றுள்ளார். இதேபோல் உதகையில் ஒரு பேக்கரிக்கு மாதம் ரூ. 2 ஆயிரம், உணவகத்துக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் வரை தரக் கட்டுப்பாட்டு அலுவலர் லஞ்சமாக வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் தொடர்புள்ளது குறித்து முதல்வரிடம் ஏற்கெனவே புகார் தெரிவித்து உள்ளோம். முதல்வர் சிறப்பான ஆட்சியை அளித்துவரும் நிலையில் அவரது ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு கடைக்குள் நுழைந்து அதிகாரிகள் மிரட்டும்போது வணிகர்கள் கூடி கடுமையாக எதிர்ப்பு காட்டுவோம் என்றார் அவர்.