ஜெயலலிதா விடுதலை தொடர்பாக கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய திமுக மூத்த நிர்வாகிகள்: இன்று சட்டத்துறை செயலாளர்களுடன் ஆலோசிக்க முடிவு

ஜெயலலிதா விடுதலை தொடர்பாக கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய திமுக மூத்த நிர்வாகிகள்: இன்று சட்டத்துறை செயலாளர்களுடன் ஆலோசிக்க முடிவு
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் திமுக மூத்த நிர்வாகிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது நேற்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் ஜெயலலிதா, இளவரசி, சுதாகரன், சசிகலா ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், தலைமை செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டவர்கள் நேற்று காலை 10 மணியளவில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர்.

மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்து எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க அங்கு வந்ததாக கூறப்பட்டது. தொலைக்காட்சி வழியாகவும் பெங்களூருவில் உள்ள திமுக வழக்கறிஞர்களின் மூலமும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நிகழ்வுகளை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். தீர்ப்பு வெளியானதும், அதுகுறித்து சுமார் 2 மணி நேரம் அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து தெரிவிப்பார் என்று செய்தியாளர்கள் காலையிலேயே கோபாலபுரத்தில் திரண்டிருந்தனர். ஆனால், பத்திரிகையாளர்களை சந்திப்பதை கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களும் தவிர்த்தனர். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு குறித்த கருணாநிதியின் 3 பக்க அறிக்கை மட்டும் மதியம் 1.30 மணியளவில் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலிருந்து வெளியேறினார்கள்.

அடுத்து என்ன?

இந்த தீர்ப்பு தொடர்பாக நேற்று திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கருணாநிதி, தொடர்ந்து இன்று திமுக சட்டத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக படித்துவிட்டு, அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக அவர்களுடன் கருணாநிதி ஆலோசிக்கவுள்ளதாகவும், ஒருவேளை கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தால் அதில் திமுக தரப்பில் க.அன்பழகனும் தன்னை இணைத்துக்கொள்ள கோருவார் என்றும் திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in