

தமிழகத்தில் ஏற்பட்ட தோல்வியால் தலைகுனிந்து நிற்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரைக்கு சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என விரும்பினர். எனவே நரேந்திர மோடியின் நிர்வாகத்திறன், நேர்மை, தேசபக்தி, மக்களை நேசித்த தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு அவரை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர்.
நாடு முழுவதும் வீசிய மோடி அலை தமிழகத்திலும் வீசியதால்தான் கன்னியாகுமரி யிலும், தருமபுரியிலும் வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தில் ஆளுங்கட்சி எடுத்த சில நடவடிக்கைகள், யுக்திகள்தான் பாஜகவின் வெற்றியைத் தடுத்தது என்பதை மறுக்க முடியாது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியாததை நினைத்து, அந்த கூட்டணியை உருவாக்கியவர்களில் ஒருவன் என்ற முறையில் தலைகுனிந்து நிற்கிறேன். அந்த வேதனை மனதிலே உள்ளது.
‘அம்மா’வே காரணம்
அதிமுக பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றிக்கு முழு காரணம் முதல்வர்தான். “அம்மா”வைத் தவிர வேறு யாருக்கும் கடுகளவுகூட பங்கு கிடையாது. தேர்தல் நேரத்தில் செய்த யுக்திகள், எந்த நேரத்தில், எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் பக்குவம் ஆகியவைதான் அவரை வெற்றி பெறச் செய்துள்ளது என்றார்.