Published : 04 May 2015 08:15 AM
Last Updated : 04 May 2015 08:15 AM

கத்தரி வெயில் இன்று தொடக்கம்: மே 29-ம் தேதி வரை நீடிக்கும்- தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நீடிக்கிறது.

பொதுவாக மே மாத முதல் வாரத்தில் தொடங்கிவிடும் கத்தரி வெயில் இந்த ஆண்டு 4-ம் தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலத்தில் வெயில் 43.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலும் கூட பதிவாகலாம். கடந்த ஆண் டுகளை போல் இல்லாமல், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பரவலாக கன மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் திருச்சி, வேலூர், மதுரை, சேலம் போன்ற ஒரு சில மாவட்டங்களில் வெயில் அதிகமாகவே காணப்பட்டது.

சென்னையில் அதிகம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் சென்னையில்தான் அதிகபட்ச வெயில் பதிவாகியி ருந்தது. சென்னையில் 42.8 டிகிரி, வேலூரில் 42.4 டிகிரி, திருச்சியில் 40.6 டிகிரி, சேலத்தில் 40 டிகிரி, அதிகபட்ச வெப்பமாக கடந்த ஆண்டு பதிவாகியிருந்தது. சென்னையில் 2003-ம் ஆண்டில் பதிவான 45 டிகிரி வெயில்தான் மே மாதத்தில் சென்னையில் பதிவான அதிக பட்ச வெப்பமாகும்

தமிழகத்தில் பொதுவாக மே மாதத்தில் தான் வெயில் உச் சத்தை அடைகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வானவியல் சங்கத்தின் தலைவர் டி.விஜயகுமார் கூறிய தாவது:

பூகோளவியலின்படி, பூமியின் மீது கற்பனையான ரேகைகள் உள்ளன. வடக்கில் இருப்பது கடக ரேகை (Tropic of Cancer) எனவும், தெற்கில் இருப்பது மகர ரேகை (Tropic of Capricorn) எனவும் அழைக்கப்படுகிறது. சூரியன் மகர ரேகையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21-ம் தேதி அடையும். சூரியன் மகர ரேகையிலிருந்து, வடக்கில் 13.5 டிகிரியில் இருக்கும் சென்னையை நோக்கி நகர 143 நாட்கள் ஆகும். அதாவது மே 13-ம் தேதி வெப்ப கதிர்கள் நேரடியாக சென்னையை தாக் கும். எனவேதான் பொதுவாக மே இரண்டாம் வாரத்திலிருந்து அதிக வெப்பம் காணப்படுகிறது. அப்போது உஷ்ணம் அதிகமாக இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

சுபகாரியங்கள் வேண்டாம்

கத்தரி வெயில் குறித்து ஜோதிடர் சந்திரசேகர பாரதி கூறும் போது, “ஜோதிடத்தின்படி சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நகர்ந்து செல்லும் காலம்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் என்று கூறப்படுகிறது. இந்த காலத்தில் சுப காரியங்களை மேற்கொள்ளக்கூடாது” என்றார்.

என்ன செய்யலாம்?

வெயில் காலத்தில் உஷ்ணத்தை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் எஸ்.சுதர்சன் கூறியதாவது:

வெயிலின் தாக்கத்தை தணிக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தர்பூசணி, வெள்ளரி போன்ற நீர் காய்களும், பழங்களும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரமான உணவு களை தவிர்க்கலாம்.

அசைவ உணவை அளவாக சாப்பிட வேண்டும். வெயிலில் செல்லும்போது முகத்தில் சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்ளலாம். கிரீம் போடும் பழக்கம் இல்லாதவர்கள் கைக்குட்டை அல்லது மெல்லிய வெள்ளை துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்லலாம். வெளியிலிருந்து வந்தவுடன் முகத்தையும், கை கால்களையும் கழுவுவது சருமத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x