திருப்பதி என்கவுன்ட்டர் விவகாரம்: சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறக் கோரிய மனு தள்ளுபடி
திருப்பதியில் 20 கூலி தொழி லாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் நேரடி சாட்சிகள் 3 பேரிடம் மதுரை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் பெறக் கோரி தாக்கலான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பதியில் தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஏப். 7-ம் தேதி ஆந்திர அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவத்தின் நேரடி சாட்சியான சேகர், பாலச்சந்தர், இளங்கோவன் ஆகியோர் தற்போது மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற வேண்டும் எனக் கேட்டு, மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றிடிபேன் மனு தாக்கல் செய்தார்.
மனு விவரம்
‘ஆந்திரா என்கவுன்ட்டர் விவ காரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களுடன் சேகர், பாலச்சந்தர், இளங்கோவன் ஆகியோரும் சென்றுள்ளனர். 3 பேரும் தப்பி வந்தனர். இவர்கள் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இவர்கள் ஆந்திர நீதித்துறை நடுவரிடம்தான் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்பது இல்லை. எந்த நீதித்துறை நடுவரிடமும் வாக்குமூலம் அளிக்கலாம். மேலும் 3 பேரும் ஆந்திரத்துக்குச் சென்று வாக்குமூலம் அளிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. எனவே, 3 பேரிடமும் வாக்குமூலம் பெற வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.என்.தனஞ்செயன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, இந்த மனுவுக்கு பதில் அளிக்க ஆந்திரா போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றார்.
அவரை கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுவில் கூறப்பட்டுள்ள சாட்சிகள், ஆந்திராவுக்குச் சென்று வாக்குமூலம் அளிக்க நேர்ந்தால், அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வரும் என்பது உண்மைதான். இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கின் விசாரணையில் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
