

இன்றிரவு முழுக்க யோசித்துப் பாருங்கள். நான் நல்ல வேட்பாளர் என்று தெரிந்தால் எனக்கு வாக்களியுங்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உருக்கமாகப் பேசினார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அவர் மதுரை-சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சிலைமான் கிராமத்தில் இருந்து பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். பெரிய ஆலங் குளம் வரை 23 கிராமங்களில் வைகோ வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நடைபெற இருக்கிற தேர்தலில் தீர்ப்பு தரவிருக்கிற அன்புக்குரிய வாக்காளர்களே வணக்கம். நரேந்திரமோடி நாட்டின் பிரதமராகப் போகிறார் என்கிற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிற என்னை, உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க உங்களை வேண்டுகிறேன்.
இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ம் தேதி இன்று. தமிழக மக்களுக்காகப் போராடி வந்த தகுதியோடு உங்கள் வாக்குகளை நான் கேட்கிறேன். கேரளாவில் பெரியாறு அணையை உடைப்பதற்காக 1,200 கிலோ வெடிமருந்தை தயாராக வைத்திருக்கிறார்கள். அணையை உடைச்சா நம்ம 5 மாவட்டமும் பஞ்சப் பிரதேசமாகிவிடும்.
கேரளாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரப்பார்த்தது. அச்சட்டம் வந்தால் கேரள அரசு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தற்போது அச்சட்டம் நிலுவையில் இருக்கிறது. மோடி பிரதமரானால் அச்சட்டம் ரத்து செய்யப்படும். தி.மு.க., அ.தி.மு.க.வைப் புறக்கணித்து நமக்கு தமிழகம் வாக்களித்துள்ளதே என்ற நன்றி உணர்ச்சியோடு நமக்கு நல்லது செய்வார்கள். எனவே, எங்களுக்கு வாக்களியுங்கள்.
தமிழ்நாட்டின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்க, நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் கண்ணீரை துடைக்க, தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க, தமிழ கத்தின் குரலாக… உங்கள் குரலாக இந்திய நாடாளு மன்றத்தில் நான் பேச வாய்ப்பு தாருங்கள். நான் ஜாதி, மத, கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். மதுவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக 1,500 கி.மீ. நடந்திருக்கிறேன். குஜராத்தில் மதுவை ஒழித்தவர் தான் நரேந்திர மோடி.
எல்லோரும் உங்களுக்கு உழைப்போம் என்றுதான் சொல்வார்கள். என்னைப் பற்றி கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள். நான் கட்சி, ஜாதி, மதம் எதுவும் பார்க்க மாட்டேன். யார் துயரப்பட்டாலும் அவர்களது துயரத்தைத் துடைக்க வேண்டும் என்று நினைப்பவன்.
மற்றவர்களைப் போல நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன் என்று சொல்ல விரும்பவில்லை. இன்றிரவு யோசித்துப் பாருங்கள், நான் நல்ல வேட்பாளர் என்று தெரிந்தால், எனக்கு ஓட்டு போடுங்கள்.
நான் எம்.பி.யாக இருந்தால் அங்கு போய் உழைப்பேன். இல்லை என்றால் இங்கிருந்தே உழைப்பேன். அந்தளவுக்குத் தமிழ் மண்ணையும், மக்களையும் நேசிப்பவன் நான் என்றார் வைகோ.