கோவை அரசு கால்நடை மருத்துவமனை செயல்பாடு: வளர்ப்புப் பிராணிகளை பராமரிப்போர் அதிருப்தி

கோவை அரசு கால்நடை மருத்துவமனை செயல்பாடு: வளர்ப்புப் பிராணிகளை பராமரிப்போர் அதிருப்தி
Updated on
1 min read

கோவையில் செயல்பட்டுவரும் கால்நடை அரசு மருத்துவமனையில் மருந்துகள், மருத்துவர்கள் இருப்பதில்லை என வளர்ப்புப் பிராணிகளை அவசர சிகிச்சைக்காக கூட்டிச் செல்லும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கோவை வெறைட்டிஹால் சாலை பகுதியில் அரசு கால்நடை பன்முக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 85 கால்நடை மருத்துவமனைகளில், இது தலைமை மருத்துவமனையாக விளங்குகிறது. கால்நடைகளுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்கள் இங்கு உள்ளன.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மருத்து வமனை 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனை ஆகும். ஆனால், பெயரளவில் மட்டுமே 24 மணி நேரம் என தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், பகல் நேரத்தில் சென்றால்கூட மருத்துவர்கள் இருப்பதில்லை; மருத்துவர்கள் இருந்தாலும் மருந்துகள் இருப்பதில்லை. வளர்ப்புப் பிராணிகளை அழைத்துச் சென்றால் வெளியே காசு கொடுத்து மருந்து வாங்கி வருமாறு தெரிவிக்கின்றனர் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து வளர்ப்பு பிராணிகளைப் பராமரித்து வரும் டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த ஏ.ராஜ்கிருஷ்ணா கூறியதாவது: கால்நடைகளுக் கான சிகிச்சைக்கு முக்கிய மருத்துவமனையாக இருந்து வரும் இந்த மருத்துவமனை யில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. மொத்தம் 3 ஷிப்டுகளாக மருத்துவமனை இயங்க வேண்டும். இந்த மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள், 5 பயிற்சி மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், மருத்துவமனைக்கு காலையில் வளர்ப்பு பிராணிகளை எடுத்துச் சென்றால் கூட மருத்துவர்கள் இருப்பதில்லை.

உயிருக்குப் போராடும் வளர்ப்புப் பிராணிகளை தூக்கிச் செல்லும்போது கண்டு கொள்வதில்லை.

அப்படியே, மருத்துவர்கள் இருந்தாலும் அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்தை மருத்துவமனை அருகே உள்ள தனியார் மருந்துக் கடைக்குச் சென்று வாங்கி வர வேண்டும். மருந்துகள் மட்டும் இல்லாமல் கைக்கு அணியும் கிளவுஸ், பிளேடு போன்றவற்றையும் வாங்கி வர வற்புறுத்துகின்றனர். மருத்துவமனையின் அதிகபட்ச செயல்பாடு என்பது மாலை 5 மணி வரையில்தான் இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து கால்நடைத் துறை மாவட்ட இணை இயக்குநர் முத்துகோபாலகிருஷ்ணன் கூறியதாவது: 24 மணி நேரமும் செயல்படும் அந்த மருத்துவமனையில், 4 மருத்துவர் களுக்கு பதிலாக 3 மருத்துவர்களே உள்ளனர்.

3 பயிற்சி மருத்துவர்கள் உள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டாயம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஒரு மருத்துவர் பணியிடம் காலியாக இருப்பதால் இரவில் பயிற்சி மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

அதிக பிராணிகள் சிகிச்சைக்கு அழைத்து வரப்படுவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது, தேவையான மருந்துகள் வந்துள்ளன. எவ்வித பிரச்சினையும் இன்றி சிகிச்சை அளித்து வருகிறோம். பொதுமக்கள் தெரிவித்துள்ள புகார் மீது நிச்சயம் விசாரிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in